"முறைகேடுகளின் மொத்த உருவம் ஓபிஎஸ் & இபிஎஸ்.." புள்ளி விவரங்களுடன் விளாசிய அமைச்சர் சக்கரபாணி
சென்னை: பொங்கல் பரிசுப் பொருட்களில் முறைகேடு நடப்பதாக ஓபிஎஸ்-இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்குக் கரும்பு உட்படப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு சில பொருட்கள் தரமற்ற முறையிலும் எடைக் குறைவாகவும் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அடிப்படைப் புரிதல் கூட இல்லை
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டிற்குத் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இன்றைக்கு ஓபிஎஸ் 21 பொருள்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிக் கொண்டிருப்பதைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 10 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு வெளிமாநிலங்களிலிருந்து தான் சீரகம், கடுகு. கோதுமை மாவு போன்றவை வருகின்றன என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் இந்தித் திணிப்பு எதிர்ப்பையும் வெளிமாநிலக் கொள்முதலையும் இணைத்துப் பேசுகிறார். இதிலிருந்தே இவர் இல்லாத குறைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

கடந்த காலம்
2011 வரை திமுக ஆட்சி வழங்கி வந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை 2012ஆம் ஆண்டில் வழங்காமல் நிறுத்தி விட்டார்கள். 2013ஆம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் ரொக்கம் ரூ.100/- வழங்கி, 2014- ஆம் ஆண்டிலும் அவ்வாறே வழங்கி. 2015 -ஆம் ஆண்டு ஏதும் வழங்காமல் 2016 ஆம் ஆண்டு இவற்றுடன் இரண்டடி நீளக் கரும்புத் துண்டு ஒன்று சேர்த்துக் கொடுத்தார்கள். 2017ஆம் ஆண்டு ரொக்கமின்றி 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது. 2018- ஆம் ஆண்டிலும் ரொக்கமின்றி இந்தப் பொருள்களே வழங்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு மேற்குறிப்பிட்ட பொருள்களுடன் பொங்கல் பையும் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கினார்கள். 2020-ஆம் ஆண்டும் அவ்வாறே செய்தார்கள். 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு ரூ. 2500 /- ரொக்கமாகப் பொங்கலுக்கு வழங்கினார்கள்.

ஒப்பந்தம்
கொரோனாவிற்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று எங்கள் தலைவர் விட்ட கோரிக்கைக்குப் பிறகும் ரூபாய் ஆயிரம் மட்டுமே வழங்கினார்கள். ஆனால் எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.4000/-ரொக்கமாக இரு தவணைகளிலும் 14 மளிகைப் பொருள்கள் தொகுப்பையும் வழங்கினார்கள். கடுமையான நிதி நெருக்கடியிலும் தாய்மார்களுக்குப் பெரிதும் பயன்படும் என்பதற்காகப் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 21 பொருள்கள் வழங்க ஆணையிட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ் போன்றவர்கள் இட்டுக் கட்டப்பட்ட குறைகளையும் பெரிதுபடுத்தி அறிக்கை விடுகிறார்கள். வெளிப்படையாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுப் பல நிறுவனங்கள் விலைப்புள்ளிகள் கொடுத்து அவற்றில் குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது முன்னாள் முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓபிஎசுக்கு தெரியாதா?

48 ரூபாய்
இந்தியாவிலுள்ள அனைத்து நிறுவனங்களும் தகுதியிருந்தால் ஒப்பந்தப் புள்ளி திறந்தவெளிச் சட்டப்படி இது போன்ற ஒப்பந்தப் புள்ளிகளில் கலந்து கொள்ள முடியும் என்பது இவருக்குத் தெரியாதா? 20 கிராம் முந்திரிப் பருப்பு, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய 45 கிராம் பொருள்களுக்குச் சென்ற 2021 - 2022 ஆம் ஆண்டு இவர்கள் வழங்கிய தொகை ரூ. 45/ . ஆனால் எங்கள் ஆட்சியில் 50 கிராம் முந்திரிப் பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய், ஆகிய 110 கிராம் பொருள்களுக்கு இந்த ஆண்டு வழங்கிய தொகை ரூ.62/, ஓபிஎஸ் கணக்குப்படி இந்த மூன்று பொருள்களில் மட்டுமே 48 ரூபாயை மீதப்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு இவர்கள் ஆட்சியில் இந்த கொள்முதலில் மட்டும் இவர்கள் என்ன பெற்றார்கள் என்பது இவர்களுக்கே வெளிச்சம்.

முறைகேடுகள், குழப்பங்களின் மொத்த உருவம்
முறைகேடுகள், குழப்பங்களின் மொத்த உருவம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தான். தான் திருடி பிறரை நம்ப மாட்டார்கள் என்று சொல்வார்கள். அது போல் தங்கள் ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்குவதிலும் எப்படியெல்லாம் ஊழல் செய்தோம் என்பதை மனப்பாடம் வைத்துக் கொண்டு நேர்மையாகப் பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கியுள்ள திமுக அரசின் மீது பழி போடுகிறார்கள். அதிமுக ஆட்சியில் அடித்த கமிஷனை இன்னும் மறக்க முடியாமல் தாங்கள் கமிஷன் அடித்தது போல் தான் இப்போதும் நடந்திருக்கும் எனக் கற்பனையில் ஒபிஎஸ் - இபிஎஸ் மிதக்கிறார்கள். அதனால் அதிமுக ஆட்சியில் கூட்டுறவுக் கடைகளில் பணியில் அமர்த்தப்பட்ட சில அதிமுக கருங்காலிகளை வைத்து முதலில் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தார்கள். எங்கள் முதலமைச்சர் கடைகளுக்கே சென்று பொங்கல் பரிசுகளை ஆய்வுசெய்து மக்களைச் சந்தித்துப் பேசியவுடன் அந்த பிரச்சாரம் பிசுபிசுத்தது. இப்போது ஓபிஎஸ்-ஸும் -இபிஎஸ்ஸும் பொய் பிரச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளார்கள். இதுவும் மக்கள் மன்றத்தின் தோற்கும்.

தலைவிரித்தாடியது
பொங்கல் பரிசு கொடுப்பது. பை வாங்குவது, கரும்பு வாங்குவது எல்லாவற்றிலும் அதிமுக ஆட்சியில் தான் ஊழல் தலைவிரித்தாடியது. திமுக ஆட்சியில் இல்லவே இல்லை என்பது ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்குமே தெரியும். ஆதாரங்கள் இருந்தால் என்னைச் சந்தித்து ஓபிஎஸ் இபிஎஸ் தரட்டும். இந்த அரசு எந்த வித விசாரணைக்கும் தயாராக இருக்கிறது. பொங்கல் பரிசுகளை வாங்கிவிட்டு வரும் ஒவ்வொரு தாய்மாரும் தரமான பொருட்கள் எனப் பாராட்டுகிறார்கள். மக்கள் பாராட்டுவது ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்குமே எரிச்சலாக இருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் 21 தரமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவதற்கான பொருட்கள் கொள்முதல் செய்வதில் எந்த முறைகேடும் இல்லை. குளறுபடிகளும் இல்லை" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications