20 நாட்கள் தலைமறைவு- பிடிபட்ட கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்- சிறையில் அடைப்பு
சென்னை: பண மோசடி வழக்கில் கைதான மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அதிகாலை 4 மணி வரை போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேந்திர பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Recommended Video

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலைவாங்கி தருவதாக பொதுமக்களிடம் ரூ3 லட்சம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளில் தமக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி போலீசாரிடம் கைதாகாமல் இருக்க தப்பி ஓடி தலைமறைவானார்.
கர்நாடகா மாநிலத்தில் பாஜக பிரமுகர்கள் உதவியுடன் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி நேற்று போலீசாரிடம் சிக்கினார். இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு விருதுநகர் கொண்டுவரப்பட்டார். விருதுநகரில் நேற்று இரவு முதல் அதிகாலை 4 மணிவரை போலீசார் விடிய விடிய ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்குப் பின் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிபதி பரம்வீர் முன்பாக ராஜேந்திர பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ராஜேந்திர பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று இரவு ராஜேந்திர பாலாஜி அழைத்துவரப்பட்ட போது அவருக்கு ஆதரவாக முழக்கமிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications