அடுத்த 3 மணி நேரத்திற்கு ஜில் மழைக்கு வாய்ப்பு.. குடை அவசியம்.. உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பகல் நேரங்களில் அக்னி வெயில் காலம் போல சுட்டெரிக்கிறது. அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கரூர் பரமத்தி 103.1, ஈரோடு 100.4, வேலூரில் 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டியது. 7 செமீ மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே 21ஆம் தேதி வரைக்கும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் முதல் 21ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications