பல்லவன் இல்லம் டூ சென்னை தலைமை செயலகம்.. மார்ச் 6ல் பாருங்க.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் பலன்கள், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை மறுக்கப்படுவதற்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி வழங்காதது தான் காரணம் என்று கூறியுள்ள போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள், பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.இதற்காக மார்ச் 6-ல் கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு விடுத்த அறிக்கையில், "ஊதிய பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பு இல்லாத நிலையில், அடுத்த மாதம் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் பலன்கள், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை மறுக்கப்படுவதற்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி வழங்காதது தான் காரணம்.

அதேநேரம், கடந்த 2022-ம் ஆண்டு வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்குவதற்கு குழு அமைக்கப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகைக்கு உரிய நிதி ஒதுக்க வலியுறுத்தி வரும் 6-ம் தேதி பல்லவன் இல்லத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். அரசிடம் நிதி பெறுவது தான் அனைத்து பிரச்சினைக்குமான தீர்வு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்கள்.இதன்படியே இரண்டு நாள் முன்பு தான் போராட்டம் நடத்தினார்கள்.. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பித்தக்கது.












Click it and Unblock the Notifications