வெள்ளை அறிக்கை.. சேக்கிழாரின் ராமாயணம் படித்தவருக்கு புரியுமா.. எடப்பாடிக்கு டிஆர்பி ராஜா பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேக்கிழார் எழுதிய ராமாயணத்தை படித்தவருக்கு தொழில்துறையின் அறிக்கையில் உள்ள புள்ளி விவரங்கள் எந்த அளவுக்கு புரியும் என்று தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். 2019ல் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவுக்கு சென்று போட்ட ரூ.5,087 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 25 சதவிகிதம் கூட தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து தாயகம் திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

TRB Raja vs EPS

இதுதொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா, அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகால சீர்கெட்ட நிர்வாகத்தால் தமிழ்நாடு என்று பெயரைக் கேட்டாலே தொழில் முதலீட்டாளர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருந்த நிலையை மாற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறையில் தமிழ்நாட்டை உயர்வான நிலைக்குக் கொண்டு வந்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சலுடன் அறிக்கை விடும் எதிர்க்கட்சித் தலைவரின் அறியாமையைப் பார்த்து பரிதாபப்படுகிறேன்.

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்களால் எவ்வளவு முதலீடு வந்தது என்று 'திரும்பத் திரும்ப பேசும்' அரசியல் களத்தின் வடிவேலுவாகி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். முதலமைச்சர் தன்னுடைய ஜெர்மனி - இங்கிலாந்து பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே முந்தைய வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகளாக மாறி, எங்கெங்கே தொழில்நிறுவனங்கள், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஊடகங்களிடம் தெளிவாக விளக்கிவிட்டுத்தான் புறப்பட்டார்.

இது எதுவும் அறியாமலும் புரிந்து கொள்ளத் தெரியாமலும் சொந்தக் கட்சிப் பிரச்சினைகளால் கோமாவில் இருந்து திடீரென விழித்து, 'அன்னைக்கு காலையில 6 மணிக் இருக்கும். கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு..' என்று எதிர்க்கட்சித் தலைவர், சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய கேள்விகளுக்கு தொழில்துறை மானியக் கோரிக்கையிலும், அதன்பிறகு பல அறிக்கைகளிலும் தெளிவாக பதில் தரப்பட்டுள்ளது. சேக்கிழார் எழுதிய இராமாயணத்தைப் படித்தவருக்கு தொழில்துறையின் அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்குப் புரியும் என்றும் தெரியவில்லை.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முதலமைச்சர் இதற்கு முன் பயணித்த ஐக்கிய அரபு நாடுகளில் 6 ஒப்பந்தங்கள், ரூ.6100 கோடி முதலீடு, சிங்கப்பூர் 1 ஒப்பந்தம், ரூ.312 கோடி முதலீடு, ஜப்பான் 7 ஒப்பந்தங்கள், ரூ.1030 கோடி முதலீடு, ஸ்பெய்ன் 3 ஒப்பந்தங்கள் ரூ.3440 கோடி முதலீடு, அமெரிக்கா 19 ஒப்பந்தங்கள் ரூ.7,616 கோடி ரூபாய் முதலீடு எனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த 36 ஒப்பந்தங்களில் Yield Engineering Services, Infinix Services, Rockwell Automation உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையை எட்டிவிட்டன.

11 நிறுவனங்களின் நில எடுப்பு கட்டுமானப் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்பட்டு அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை.

ஆனால், ஒப்பந்தம் போட்டுவிட்டு எதையுமே செய்யாத உங்களின் உதவாக்கரை ஆட்சியைப் போல இல்லாமல், நீங்கள் போட்ட ஒப்பந்தங்களையும் நம் தமிழ்நாட்டுக்கான முதலீடுகளாக மாற்றும் முயற்சியை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல உங்களின் அமெரிக்க பயணத்தின் லட்சணம் பல்லைக் காட்டுகிறது. 2019ஆம் ஆண்டு முதலீடுகளை ஈரப்பதற்காக அன்றைய முதலமைச்சராக அமெரிக்காவுக்கு சென்ற நீங்கள் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 27.

இதன் மூலம் 5087 கோடி ரூபாய் முதலீடு கிடைக்குமென்றும் 24,720 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் சொன்னீர்கள். ஆனால், உண்மை நிலையைத் தேடினால், ஒப்பந்தம் போடப்பட்ட ரூ.5087 கோடியில் 25% முதலீடு கூட வரவில்லை. தமிழ்நாட்டை விட மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கு அதிக முதலீடுகள் வந்திருப்பதாக சொல்வதிலும் உண்மையில்லை. தொழில்துறையைப் பொறுத்தவரை, அந்நிய நேரடி முதலீட்டுத் தரவுகள் என்பவை முழுமையானவை அல்ல என்பதை பல முறை தெரிவித்திருக்கிறோம்.

ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்தில் தலைமையகம் உள்ளதோ அந்த மாநிலத்தின் பெயரில்தான் அந்நிய நேரடி முதலீடு கணக்கு காட்டப்படும். தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியத் தலைமையகம் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இருந்தால் அந்த மாநிலங்களுக்குரியதாக தரவுகள் காட்டும். ஆனால், ஒப்பந்தம் செய்த தமிழ்நாட்டிற்குதான் அந்த முதலீடு இறுதியில் நிலம், கட்டிடம், இயந்திரங்கள் என வந்தடைந்து வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இது பற்றி பல முறை தெளிவுபடுத்தியும் விளக்கம் கேட்பது விளக்கெண்ணெய்த்தனமாக இருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே. சொன்னாலும் புரியப்போவதில்லை. சொந்தமாகவும் தெரிந்துகொள்ளப் போவதில்லை என்கிற நிலைமையில் உள்ள உங்களுக்கு வெள்ளை அறிக்கை கொடுத்தால் மட்டும் விளங்கிவிடுமா என்ன? இறுதியாக ஒன்று, தொழில்துறை சார்ந்த விளக்க அறிக்கைகள் சமூக வலைத்தளப் பக்கத்தில்தான் வெளியாகிறது என்று சொல்லும் உங்களின் அறிக்கையும் சமூக வலைத்தளத்தில்தான் பதிவிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கை எழுதித் தருபவரிடம் அடுத்த முறை மறக்காமல் ஞாபகப்படுத்திவிடுங்கள்.

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி குறித்து தெளிவாகப் பல முறை அறிக்கை வெளியிட்டும் அதைப் புரிந்து கொள்ள உங்களால் முடியவில்லை. நான் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற முறையில் ஒரு வெள்ளைத் தாளை வீணடிக்க விரும்பவில்லை என்பதை, இனி பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று சொல்லிவிட்டு மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் வெள்ளைக்கொடி வேந்தருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+