யாரு மெயின் தலை? கீர்த்தனா Vs ஜெகதீஸ்வரி! சிவகாசியில் ‘வெடித்த’ பஞ்சாயத்து! தவியாய் தவிக்குது தவெக!
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்வு அக்கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. குறிப்பாக தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண் அமைச்சர்களான கீர்த்தனா Vs ஜெகதீஸ்வரி என்ற போட்டி விருதுநகரில் உருவாகியுள்ளதாகச் சொல்கின்றனர் அக்கட்சியினர்.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்களிடையே தான் மோதல் வெடித்துள்ளது.

இருதரப்பும் தனித்தனியாக நிகழ்ச்சிகளை நடத்த முயன்றதே பின்னர் பிரச்சினைக்கு காரணமாக மாறியதாக கூறப்படுகிறது. சிவகாசி பகுதியில் அமைச்சர் கீர்த்தனாவின் ஆதரவாளர்களுக்கு, மாவட்ட செயலாளர் மாரிச்செல்வத்தின் ஆதரவாளர்களும் தனி தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
விஜய் பிறந்தநாள்
இரு தரப்பினரும் முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு தனித்தனியாக பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த சூழலில், விசுவநத்தம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர் கீர்த்தனா
ஆரம்பத்தில் வாய்த்தகராறாக தொடங்கிய விவகாரம் பின்னர் கடும் மோதலாக மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிய நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கீர்த்தனாவை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் சில கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சியின் நிகழ்ச்சியிலேயே இத்தகைய சம்பவம் நடந்ததாக வெளியான தகவல்கள், மாவட்ட அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
உட்கட்சி மோதல்
குறிப்பாக கட்சியின் ஒற்றுமை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே பகுதியில் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் ஏற்பாடு செய்திருந்த மற்றொரு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, அரசு நலத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் மூலமாகவே அளிக்க வேண்டும் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் ஜெகதீஸ்வரி
மேலும் அவர் கொண்டு வரும் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதாக பேசப்படுகிறது. அமைச்சரின் இந்தக் கருத்து கீர்த்தனாவின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஒரே தொகுதியில் பல நிர்வாகிகள் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஒருவரின் பெயரை மட்டும் முன்னிறுத்தி அமைச்சர் பேசியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகம்
கடந்த சில வாரங்களாக தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் இணைந்து வரும் சூழலில், மாவட்ட அளவிலான அதிகாரப் போட்டிகளும் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல இடங்களில் கட்சி பொறுப்புகள், பதவிகள் மற்றும் தேர்தல் வாய்ப்புகள் தொடர்பாக போட்டி உருவாகி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விருதுநகர் தவெக
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு சாதாரண நிகழ்வு மட்டுமல்ல அல்லது எதிர்காலத்தில் பெரிய அளவிலான உட்கட்சி பிரச்சினைகளுக்கு முன்னோட்டம் என்கின்றனர் விருதுநகர் தவெகவினர். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே கட்சியின் பல்வேறு மாவட்டங்களில் அதிகார மையங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டால், அதை எப்படி தலைமை கையாளப் போகிறது என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications
