தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய விஜய்.. ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் இன்னும் சைலண்ட்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக மக்களுக்கு பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 'ஜனநாயகன்' திரைப்பட ரிலீஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் விஜய் இன்று எக்ஸ் தளத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜனவரி 16 ஆம் தேதியான நாளை மாட்டு பொங்கலும், ஜனவரி 17 ஆம் தேதி சனிக்கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் விஜய்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும். அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
— TVK Vijay (@TVKVijayHQ) January 15, 2026
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தை மாதம் 1ஆம் தேதியான பொங்கல் திருநாள், உழவர் தினத்தை தமிழ் புத்தாண்டு தினம் என அறிவித்தார். அதனை அடுத்து 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா ரத்து செய்து சித்திரை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்.
இதனால், தமிழ்நாட்டில் சித்திரை 1ஆம் தேதியன்று திமுக, சித்திரை திருநாள் என்றும், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்றும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடுவது வழக்கம். இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் தை 1 ஆம் தேதியான இன்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 அன்று விஜய், சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, கரூர் துயரச் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அண்மையில் டெல்லி சென்று ஆஜராகி இருந்தார் விஜய்.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்க மறுக்கும் பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதற்கொண்டு பலரும் குரல் கொடுத்து வரும் சூழலில் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் கூட இதுதொடர்பாக பதிவிடவில்லை. இந்நிலையில். இடைவெளிக்குப் பிறகு இன்று பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications