அமைதியோ அமைதி.. கவின் விவகாரத்தால் சரிந்த விஜய் செல்வாக்கு! திருமாவளவன் பின் திரளும் தலித் இளைஞர்கள்
சென்னை: நெல்லை கவின் ஆணவக் கொலை தொடர்பாக தவெக தலைவர் விஜய் வாய் திறக்காமல் அமைதி காப்பது, அவரது செல்வாக்கைக் குறைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் தலித் இளைஞர்கள் மத்தியில் விஜய் மீது இருந்த நம்பிக்கை வலுவிழந்திருப்பதோடு, அது விசிக தலைவர் திருமாவளவனுக்கு களத்தை சாதகமாக்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பொதுமக்கள் மத்தியிலும் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல் கவின் ஆணவக் கொலை விவகாரத்தில் விசிக தரப்பில் மட்டுமே நெல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நேரடியாக கவின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இருந்தார். திமுக தரப்பில் கனிமொழி, கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பாஜக தரப்பில் நயினார் நாகேந்திரன் கவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியிருந்தார்.
ஆனால் பொதுமக்களிடையே அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட தவெக தலைவர் விஜய், கவின் ஆணவக் கொலை தொடர்பாக ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. திருப்புவனம் அஜித் குமார் லாக் அப் மரணத்தின் போது, அவரது வீட்டிற்கு திடீரென சென்று விஜய் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார். அதுபோல் கவின் குடும்பத்தினரையும் நேரில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுவரையில் விஜய் ஆணவக் கொலை தொடர்பாக வாய் திறக்காததால், அக்கட்சியினர் மத்தியிலேயே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இடைநிலை சாதிகளின் ஆதரவு போய்விடுமோ என்ற அச்சத்தில் விஜய் ஆணவக் கொலை குறித்துப் பேசவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எந்த வகையில் விஜய் மாற்று என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் விஜயின் மவுனம், திருமாவளவனுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது. விஜய் கட்சித் தொடங்கியதில் இருந்தே அதிகளவில் தலித் மக்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு இருந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் விஜய் கட்சியில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து கொண்டனர். இதனால் விசிகவின் வாக்கு வங்கியில் சேதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால் கவின் ஆணவக் கொலை விவகாரத்தில் திருமாவளவன் நேரடியாக இறங்கி தலித் மக்களுக்காகப் போராடி இருக்கிறார். அஜித் குமாருக்காகக் களத்திற்கு வந்த விஜய், கவின் விவகாரத்தில் ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன் என்று தலித் மக்களிடையே விவாதம் எழுந்துள்ளது. இதனால் திருமாவளவன் பக்கம் பலரும் சாய்ந்து வருவதாகப் பார்க்கப்படுகிறது.
தவெகவை தொடங்கியதில் இருந்தே விஜய் விசிக உடன் கூட்டணி அமைக்க விரும்பி வருகிறார். ஆனால் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இல்லை என்று கூறியதோடு, திமுக வாங்கும் 4 வாக்குகளில் ஒன்று விசிகவின் வாக்காக இருக்கும் என்று அறிவித்துள்ளார். தற்போது கவின் விவகாரத்தில் விஜய் அமைதி காப்பது, விசிக கட்சியினர் விஜயை சரமாரியாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications