தவெக ஏன் அமைதியானது.. நாளை விஜய் உடைக்க போகும் சஸ்பென்ஸ்.. ஆதவ் அர்ஜுனா அப்டேட்
சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் கூறி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்த தவெக சமீபகாலமாக அமைதியாக உள்ளது. இந்நிலையில் தவெக ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரெய்டின்போது பயந்தது யார் என்று விளக்கமளித்தவர் "கடந்த ஒரு மாதமாக நாங்கள் ஏன் அமைதியாக இருந்தோம் என்பதற்கான பதில் நாளை தெரியும்" என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அந்தக் கட்சியின் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயாலளர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, "நாங்கள் சிபிஐ விசாரணைக்கு சென்று வந்தால் பதறிட்டார்கள், பயந்துவிட்டார்கள் என்கிறார்கள். ரெய்டு வரும்போது யார் யார் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஊடகங்களில் சும்மா மிரண்டுவிட்டனர் என்று கூறுகிறார்கள்.

யாருக்கு பயம்
ரெய்டில் மிரண்டு யார் யார் மருத்துவமனை சென்றார்கள், நடுங்கினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அவர்கள் மாட்டினால் முதலமைச்சர் குடும்பம் மாட்டிக் கொள்ளும் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது யார் என்பது தெரியும். இந்த பதற்றம் எல்லாம் திமுகவுக்கு தான் இருக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் 50,000 கோடியை அடித்து வீட்டில் மறைத்து வைக்கவில்லை. நீங்கள்தான் ஒளித்து வைத்துள்ளனர்.
தலைவர் சொன்னதை போல நாங்கள் தூய சக்தி. எதாவது இருந்தால் தானே பயப்பட வேண்டும். ஆனந்த் அண்ணன் வீட்டிற்கு சென்றால் விபூதி, குங்குமம் பெட்டி, 50 சாமி படங்கள் இருக்கும். அதை வேண்டுமானால் எடுத்து செல்லுங்கள். உங்கள் வீட்டில் என்ன இருக்கிறது என்பது எல்லா மக்களுக்கும் தெரியும். கொள்ளையடித்த காசில் 10 ரூபாய் பாலாஜி ஒவ்வொரு வீடாக சென்று 2,000 ரூபாய் கொடுப்பார்களாம்.
ஏன் அமைதி தெரியுமா
இவர் தேர்தலில் பெரிய சக்திவாய்ந்த தலைவராக இருப்பாராம். ஊழல் செய்து மக்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பது பெரிதா. இ.டி ரெய்டு வந்தபோது அவர் பேன்டில் என்ன செய்தார். அவரை செயல் வீரர் என்கிறார்கள். எங்கள் தலைவர் மாநாடு நடத்தினால் எந்த செலவும் இல்லாமல் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் 20 லட்சம் மக்கள் வருகை புரிகிறார்கள். இதுதான் கட்சி. இவர்களுக்கு எல்லாம் கட்சி கட்டமைப்பு உள்ளதா, ஒரு மாதம் அமைதியாகிவிட்டனர் என கூறுகிறார்கள்.
நாங்கள் ஏன் அமைதியாக இருந்தோம் என்பதற்கான கூட்டம் நாளை நடக்கும். அப்போது உங்களுக்கு அதற்கான காரணம் தெரியும். தலைவர் கட்டளையின்படி ஆனந்த் அண்ணன், செங்கோட்டையன் அண்ணன், மாவட்ட செயலாளர்கள் என்னசெய்தார்கள் என்பது நாளை தெரியும். தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு ஒன்றிய, நகர செயலாளர்களின் கூட்டம் நாளை நடக்க போகிறது. அதில் எங்கள் பணிகள் தெரியும். எங்கள் தலைவரின் பேச்சில் தெரியும்.
தலைமை தான் முக்கியம்
2011 ஒரு சேலை வைத்து கொண்டு வெற்றி பெற பார்த்தார்கள்.அப்போது ஜெயலலிதா அமைதியாக வெற்றி பெற்றுவிட்டார். அதேபோல தலைவர் ஸ்வீப் அடித்து வெற்றி பெறுவார். எத்தனை கூட்டணி உருவாக்கினாலும், யாரை இழுத்து உள்ளே போட்டாலும் தலைவர் இல்லாத கூட்டணியை மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். 1967 காங்கிரஸ் பெரிய கட்சி. 40 சதவீதம் வாக்கு வங்கி இருந்தது. அப்போது மக்கள் அண்ணாவை தேர்வு செய்தார்கள். காரணம் தலைமை. மக்களுக்கு தலைமை தான் முக்கியம் என்றார்.
அப்படி இந்தமுறை எங்கள் தலைவரின் தலைமையை தேர்வு செய்வார்கள். இப்போது திமுக தான் உண்மையான அதிமுக. சேகர்பாபு முதல் வைத்திலிங்கம் வரை அங்குள்ள ஒவ்வொருவரும் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். காலம் காலமாக திமுகவுக்காக பணியாற்றியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பாவம் திமுகவிற்காக 50 ஆண்டு காலமாக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications