சகவாசம் சரியில்ல.. விஜயை கழட்டி விட்ட கட்சிகள்! பெரும் கனவு போய் பெரும் குழப்பம்! 2026 அவ்வளவு தானா?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பல்வேறு திட்டங்களை போட்டு வைத்திருந்தார் விஜய். ஆனால் அவர் எடுத்த குழப்பமான முடிவுகளால் தமிழகத்தில் விஜய் உடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் தற்போது வரை முன் வரவில்லை. தனித்துப் போட்டியிட்டாலும் தான் மட்டுமே வெற்றி பெற முடியும் தமிழகம் முழுவதும் எதிர்பார்த்த வாக்கு சதவீதம் கிடைக்குமா என்ற குழப்பத்தில் இருக்கிறார். ஒன்றுக்கு பத்தாக புதிதாக சேர்த்த நிர்வாகிகள் விஜயை போட்டு குழப்பியதால், அவர் முடிவு எடுக்க தடுமாறுவதாக கூறுகிறார்கள் சில நிர்வாகிகள்.
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய். தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே கோடிக்கணக்கான சம்பளத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்ததாக அவரே கூறி இருக்கிறார்.
கடந்த ஆண்டு பிரம்மாண்ட மாநாடு மூலம் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய், அடுத்தடுத்து பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசியது மக்களை கவனிக்க வைத்தது. முக்கிய விவகாரங்களுக்கு அறிக்கையின் மூலம் குரல் கொடுப்பது, ஆளும் கட்சியை நேரடியாக விமர்சிப்பது என தீவிர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார்.

ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற பேச்சை பொய்யாக்க பரந்தூருக்கு சென்றது, திடீரென சாலையோரம் அம்பேத்கருக்கு மரியாதை செய்தது என அவ்வப்போது அதிர்ச்சி வைத்தியமும் அளித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு எனக் கூறி இடையில் நடந்த இடைத்தேர்தலில் விஜய் புறக்கணித்தார். மாவட்ட செயலாளர் நியமனம், மாநில நிர்வாகிகள் நியமனம் என பிசியாக இருந்த விஜய் தற்போது பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தமிழகத்தில் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது என்றே கூறலாம். காரணம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வருவது உறுதியாக இருக்கிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை அது எப்போதோ முடிவு செய்யப்பட்டு விட்டது. திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் மற்றும் சிறிய கட்சிகள் என அந்த கூட்டணி 100 சதவீதம் உறுதி என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தயார், ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறியும் இதுவரை ஒரு கட்சி கூட விஜயுடன் அதிகாரப்பூர்வமாக கூட்டணி வைக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்ததன் மூலம் கொள்கை எதிரியான பாஜகவுடன் விஜய் கூட்டணி வைக்க முடியாது. அரசியல் எதிரி இன திமுகவை பிரகடனப்படுத்திவிட்டு அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது. நாம் தமிழர் கட்சியோ தனித்து தான் களமிறங்கும் எனக் கூறிவிட்டது. இதனால் அவர் கூட்டணி வைக்க மாட்டார். மேலும் கடந்த காலங்களில் விஜய் மிகவும் கடுமையாக பேசியவர் சீமான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக 2026 தேர்தலில் தனித்து களமிறங்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. கூட்டணிக்கு தயார் என்று கூறியும் எந்த கட்சியுடன் விஜய் நேரடியாக பேச்சு நடத்தவில்லை. அதிமுகவுடன் கூட புஸ்ஸி ஆனந்த் தான் பேசியதாக சொல்லப்படுகிறது. பாதிக்குப் பாதி சீட், இரண்டரை வருடம் முதலமைச்சர் உள்ளிட்ட டீல்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொள்ளாமல் சிரித்த முகத்தோடு வெளியே அனுப்பி விட்டாராம்.
இந்த நிலையில் கூட்டணி வியூகங்கள் எதுவும் கைகொடுக்காததால் மிகவும் குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய். ஒன்றுக்கு பத்தாக பல முக்கிய முகங்களை வளைத்து போட்டும் கூட்டணி வியூகம் பலிக்காதது ஏன் என்ற கேள்வி நிர்வாகிகளிடையே எழுந்திருக்கிறது. சில நிர்வாகிகளிடம் பேசிய போது," பொதுவாக விஜய் இன்னும் சினிமா மோகத்தை தாண்டி வெளியே வரவில்லை. கட்சி ஆரம்பித்த கமலஹாசன் கூட தொடர்ந்து மக்களை சந்தித்தார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் இன்னும் சென்னையை தாண்டி விஜய் எங்கும் வரவில்லை.
சினிமா பிரபலம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்வியும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களிடையே எழுந்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் பார்த்துக் கொள்ளலாம் என இரண்டாம் கட்ட நிர்வாகிகள் விஜயை சமாதானப்படுத்தி வைத்தாலும், அது இன்னும் எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிக்கும் என தெரியவில்லை. விஜய் தேர்தலில் போட்டியிட்டால் அவர் நிச்சயம் ஜெயித்து விடுவார். பிற வேட்பாளர்கள் செலவு செய்து மூன்றாம் இடம் நான்காம் இடம் கூட வருவது சிரமம் தான். காரணம் விஜயை தவிர குறிப்பிட்ட சில நிர்வாகிகள் மட்டும்தான் மக்களிடையே சென்று சேர்ந்துள்ளார்கள். மாவட்ட செயலாளர்கள் யார் என்றே இன்னும் மக்களுக்கு தெரியவில்லை. இதனால் தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா எனவும் தற்போதே யோசித்து வருகிறார்கள்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications