பாஜகவை நம்பி நடுத்தெருவில் நிற்கிறார்கள்.. இபிஎஸ்-க்கும் இதுதான் நடக்கும்.. ஆளூர் ஷா நவாஸ் அட்டாக்
பாஜகவுடன் பயணித்த உத்தவ் தாக்கரேவும், ஓ.பி.எஸ்ஸும் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இதுவே ஷிண்டேவுக்கும் எடப்பாடிக்கும் நாளை நடக்கும் என ஆளூர் ஷா நவாஸ் கூறியுள்ளார்.
சென்னை: பாஜகவுடன் பயணித்த உத்தவ் தாக்கரேவும், ஓ.பி.எஸ்ஸும் நடுத்தெருவில் நிற்கிறார்கள் இன்று. ஷிண்டேவுக்கும் எடப்பாடிக்கும் இதுவே நடக்கும் நாளை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.
அதிமுகவில் தலைமைப்பதவியை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக ஓ பன்னீர் செல்வத்திற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒற்றைத்தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டது.

கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம்
ஆனால், பொதுக்குழு கூடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக நீதிமன்றத்தை அணுகி புதிதாக தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் தரப்பு தடை வாங்கியது. இதையடுத்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி தரப்பு அதில், இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்சை தேர்வு செய்தது. அதோடு ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது முக்கிய ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது.

எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு
எனினும், ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என்று கூறிய ஓ பன்னீர் செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளரானது தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு
இந்த உத்தரவை எதிர்த்த ஓ பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதாவது கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதனால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கியது.

நடுத்தெருவில் நிற்கிறார்கள்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சியடைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு ஆனது நீதிமன்ற தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு அரசியல் கட்சியினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ட்விட்டரில், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டரில், ஏற்கனவே பாஜகவுடன் பயணித்தவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.. என்றும் எடப்பாடிக்கும் நாளை இதுவே நடக்கும் எனவும் சாடியுள்ளார்.

நாளை எடப்பாடிக்கும் இதுவே நடக்கும்
இது தொடர்பாக ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- சசிகலா தலைமையில் திரண்ட அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தி, ஓ.பி.எஸ்ஸை தூண்டிவிட்டு குளிர்காய்ந்த பாஜக, அதே ஓ.பி.எஸ்ஸை இப்போது கைவிட்டு விட்டது. பாஜகவுடன் பயணித்த உத்தவ் தாக்கரேவும் ஓ.பி.எஸ்ஸும் நடுத்தெருவில் நிற்கிறார்கள் இன்று. ஷிண்டேவுக்கும் எடப்பாடிக்கும் இதுவே நடக்கும் நாளை" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications