தமிழக டிஜிபி எந்த பதிலும் அளிக்கவில்லை.. மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி லோக்சபாவில் பரபரப்பு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில், சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களை அளிக்குமாறு தமிழ்நாடு போலீஸ் டிஜிபியை அமலாக்கத்துறை மூன்று தடவை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை டிஜிபியிடம் இருந்து பதில் வரவில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்படி வருமான வரி சோதனை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், "2019-2020 நிதியாண்டு முதல் 2022-2023 நிதியாண்டு வரையிலான 4 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 980 குழுமங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது அதில், மொத்தம் ரூ.5 ஆயிரத்து 95 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

தமிழ்நாட்டில், சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தமிழ்நாட்டில், 28 அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளில் கான்பூர் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை ஆய்வு நடத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களை அளிக்குமாறு தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யை அமலாக்கத்துறை மூன்று முறை வலியுறுத்தியது. ஆனால் இதுவரை டி.ஜி.பி.யிடம் இருந்து பதில் வரவில்லை.
வருமான வரி கணக்கு தாக்கல் குறித்த கேள்விக்கு அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், கடந்த 2022-2023 நிதியாண்டில், 7 கோடியே 40 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்களில் 5 கோடியே 16 லட்சம் பேருக்கு வருமான வரி வரவில்லை. வருமான வரி தாக்கல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேரடி வரி வசூல் ரூ.16 லட்சத்து 63 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது" என்றார்.
மணல் குவாரி விவகாரத்தில் என்ன நடந்தது: தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். தடதடத்த இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த கூறப்பட்டது. போலியான நடைச்சீட்டு, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் அள்ளியதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மணல் அள்ளியது போன்ற பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கனிம வள, நீர் வளத்துறைச் சேர்ந்த சில முக்கிய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஒருசில அதிகாரிகள் நடந்த தவறுகள் அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பாக விளக்கம் கேட்க திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது சர்ச்சையானது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பிலும், அந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் சம்மனுக்குத் தடை விதிக்கச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்குத் தடைவிதித்தும், அதேநேரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை இல்லை என்றும் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications