தமிழக வரைவு வாக்காளர் பட்டியலில் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? டிச.19-ல் தேர்தல் ஆணையம் ஷாக்!
சென்னை: தமிழக வரைவு வாக்காளர் பட்டியலில் 74 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) தொடங்கி நடைபெறுகிறது. முதலில் டிசம்பர் 4 ஆம் தேதி எஸ்ஐஆர் படிவங்களை பெறும் பணிகள் நிறைவடையும் என தேர்தல் ஆணையம் கூறியது.
இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அட்டவணையை திருத்தி புதிய அட்டவணையை கடந்த நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் 15 ஆம் தேதி வரை அட்டவணை புதுப்பித்தல், வரைவு பட்டியல் தயாரித்தல் பணிகள் நடைபெறும். இந்த பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படும். அந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள டிசம்பர் 16-ஆம் தேதி முதல் ஜனவர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும்.
பின்னர் அவை ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி எஸ்ஐஆர் படிவங்களை கொடுப்பதற்கான காலம் டிசம்பர் 11 வரையும் வரைவுத் தேர்தல் பட்டியலை வெளியிடும் தேதி வரும் 16 ஆம் தேதியும் இருந்தது.
அதை திருத்தி வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் கொடுப்பதற்கான காலம் வரும் 14 ஆம் தேதி வரை என்றும் வரைவுத் தேர்தல் பட்டியலை வெளியிடும் தேதி வரும் 19ஆம் தேதி என்றும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை 6.41 கோடி பேரில் 100 சதவீதம் பேருக்கு எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்து 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பம் 6ஆம் எண் படிவத்தை பயன்படுத்தி கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் 19ஆம் தேதி வெளியாகும் நிலையில் அதில் 74 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வசித்து வரும் வடமாநிலத்தவர்களுக்கும் வாக்குரிமை கிடைத்துவிடுமோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் 74 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications