இரட்டை எஞ்சின் அரசு.. பாஜக வானதிக்கு ஒரே மகிழ்ச்சி.. 'பீகார் போலவே தமிழ்நாட்டிலும் ரிசல்ட் வரும்'
சென்னை: தமிழகத்திலும், தேசிய ஜனநாயக கூட்டணி நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எங்கள் கூட்டணியில் புதிதாக கட்சிகள் வந்து இணைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. பீகாரை போலவே தமிழகத்திலும் இதே மாதிரியான தேர்தல் முடிவுகளை NDA கூட்டணி நிச்சயமாக பெறும் என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் என்டிஏ கூட்டணிக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 208 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.. இதில், பாஜகவும், ஐக்கிய ஜனதாதளம் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளன. அதாவது கடந்த முறையை விட அதிக இடங்களில் டபுள் மடங்கு முன்னிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது.

எதிர்க்கட்சிகளின் ‛மகாகத் பந்தன்' கூட்டணி படுதோல்வியை வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே சந்திக்க ஆரம்பித்துவிட்டது. "நல்லாட்சி வென்றுள்ளது. வளர்ச்சி வென்றுள்ளது. மக்கள் ஆதரவு மனநிலை வென்றுள்ளது. சமூக நீதி வென்றுள்ளது" என்று பிரதமர் மோடியும் தன்னுடைய மகிழ்ச்சி வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் மகிழ்ச்சி
பீகாரின் வெற்றியானது, இந்தியா முழுவதுமுள்ள பாஜகவினரை படுமகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, பீகார் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். பீகார் மாநிலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தது. அதிகமாக வாக்குகள் பதிவானால் ஆளும் அரசிற்கு எதிரான மனநிலை இருப்பதாக, தேர்தல்களில் தியரி சொல்வார்கள்.
மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை
ஆனால், இப்போது நடந்திருப்பதை ஆதரவு மனநிலை என்று எடுத்துக் கொள்ளலாம். காரணம், பீகார் மாநில மக்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்பது எல்லாருக்குமே தெரியும்.. நாட்டின் வளர்ச்சியில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து பீகார் மக்களும் செயல்பட்டிருக்கிறார்கள்.
அத்துடன் பாரதப் பிரதமர் மோடி மீதான அசைக்க முடியாத நம்பிக்கை, பாதுகாப்பான வாழ்க்கை, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என பெண்கள் அதிக அளவில் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்கள் பீகார் பின் தங்கிய மாநிலம் என்பதை பெருமளவு மாற்ற போகிறது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான "இரட்டை எஞ்சின் சர்க்கார்" தான் வேண்டும் என்று பலரும் கேட்கிறார்கள்.
இளைஞர்கள் வைத்துள்ள நம்பிக்கை
மகாகத் பந்தன் என்ற பெயரில் பிராந்திய கட்சிகளும், காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தபோதிலும், புதிதாக சில கட்சிகள் களமிறங்கிய போதிலும், வளர்ச்சி, பாதுகாப்பு போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு பாஜகவுக்கு அம்மக்கள் வாக்குகளை தந்துள்ளனர்.
மிகப்பெரிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு போன்றவற்றை பீகார் இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதால், அதனை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மட்டுமே அதனை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து உள்ளனர்.
தமிழகத்திலும் இதே முடிவு
இனி அடுத்தபடியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் பீகார் மாநில முடிவுகள் பெரிய செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எங்கள் கூட்டணியில் புதிதாக கட்சிகள் வந்து இணைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன, . பீகாரை போலவே தமிழகத்திலும் இதே மாதிரியான தேர்தல் முடிவுகளை NDA கூட்டணி நிச்சயமாக பெறும்.
SIR திருத்தத்திற்கு பிறகும்..
பீகாரில் வெறும் 5 இடங்களுக்கு கீழ் காங்கிரஸ் சென்றுவிட்டது. முக்கியமாக, SIR திருத்தத்திற்கு பிறகு எங்கள் வாக்குகளை காணவில்லை என்று யாரும் சொல்லவில்லை.. எங்கள் பூத்தில் கள்ள ஓட்டு போட்டார்கள் என்றோ எந்த அரசியல் கட்சியும் சொல்லவில்லை...
பொதுமக்கள் வாக்குரிமையை காக்க, ஒருவரின் வாக்கு கூட தவறவிட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்யவே SIR கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில் பீகாரின் SIR நியாயமான, நேர்மையான தேர்தலாக நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications