சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு.. தை அமாவாசையில் மீண்டும் பதிவுத்துறை சர்ப்ரைஸ்
சென்னை: ஒவ்வொரு சிறப்பு மற்றும் விசேஷ நாட்களின்போதும், பதிவுத்துறையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. அந்தவகையில், நாளை தை அமாவாசை என்பதால், இப்போதும் ஒரு சர்ப்ரைஸ் வெளியாகியிருக்கிறது.. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தமிழக பதிவுத்துறையை பொறுத்தவரை, வருவாய் இலக்கை நிர்ணயித்து, அதன்படி செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும், இலக்கு நிர்ணயித்து, அதை அடையுவும் முயற்சியை இப்போதே கையில் எடுத்து வருகிறது.

இதற்காகவே, பொதுமக்களுக்கு ஏராளமான அதிரடிகளையும், அறிவிப்புகளையும் பதிவுத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சுபமுகூர்த்த தினங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமாக, சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தினமும் 100 டோக்கன்கள் விநியோகிக்கப்படும். ஆனால் முகூர்த்த நாட்களில் மட்டும், பத்திரப்பதிவு கொஞ்சம் கூடுதலாக நடக்க வாய்ப்பிருக்கும் என்பதால், அந்த நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. சில விடுமுறை நாட்களிலும் கூடுதல் பத்திரப்பதிவை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததால், அதற்கேற்றபடியும் விசேஷ டோக்கன்கள் கூடுதலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
தை அமாவாசை: இந்நிலையில், தை மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தை அமாவாசை நாளான 29ம் தேதி மற்றும் 31ம் தேதியில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்ககாக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
முன்பதிவு வில்லைகள்: தற்போது தை அமாவாசை நாளான 29.01.2025 மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று தை அமாவாசை நாளான 29.01.2025 மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான 31.01.2025 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 1500 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 130 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மகிழ்ச்சி: நாளைய தினமே இந்த கூடுதல் வழங்கப்பட உள்ளதுடன், ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்றும், 2 சார்-பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்றும் பதிவுத்துறை அறிவித்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications