சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய்
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருள் நடமாட்டமே காரணம் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைத்துள்ள விஜய், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட அத்தனை பெண்களின் பாதுகாப்பும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு சார்பாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் விஜய் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை தொடங்கி வைத்த விஜய், ரோந்து வாகனத்தை ஓட்டிப் பார்த்தார். இதன்பின் முதல்வர் விஜய் பேசுகையில், ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியும் அப்படிதான். பாட்டி, அம்மா, அக்கா என்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களின் பாதுகாப்பு முக்கியம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும் போது மனம் வலிக்கிறது.
கண்கள் கலங்குகிறது. பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு காரணம் போதைப்பொருள் நடமாட்டம் தான். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுக்காததே காரணம். போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பல ஆண்டுகளாக இதனை கண்டுகொள்ளாமல் விட்டதால் தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது.
பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு தொந்தரவு செய்துவிட்டு தப்பித்து கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான தண்டனை கடுமையாக இருக்கும்.
உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமே ஒரு நாட்டிற்கு முக்கியம் என்று அல்ல. பெண்களின் பாதுகாப்பும் முக்கியம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நாட்டிலேயே முதல்முறையாக ட்ரோன்கள் மூலமாக கண்காணிக்கப்பட உள்ளது. பெண்களும், குழந்தைகளும் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பதே ஒரு ஆட்சிக்கு அழகு.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு முதற்கட்டமாக ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2ஆம் கட்டமாக 2,500 புதிய பணியிடங்கள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தொடர்ந்து முதல்வர் விஜய்யின் பாடல்களை காவல்துறையினர் இசைத்தனர். பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான இலச்சினையை வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications