41 பேர் இறந்த பிறகு தவெகவுக்கு பிறந்த ஞானோதயம்! ஆதவ், ஆனந்த் இல்லாமல் ஒன்மேன் ஆர்மியான விஜய்!
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக தொண்டர் பாதுகாப்பு படை அமைக்க தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த படையினர் பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் செய்வார்கள்.
கரூர் சம்பவத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் , கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மூவரும் தலைமறைவாக இருந்த நிலையில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மற்ற இருவர் இன்னமும் தலைமறைவாகவே இருக்கிறார்கள். அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து அவர்கள் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீது விசாரணை நடந்து அவர்களுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது போல் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக் கோரி, டெல்லியில் ஆதவ் அர்ஜுனா முகாமிட்டுள்ளார்.
இவ்வாறு விஜய்க்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் இல்லாத நிலையில் விஜய்யே கட்சியின் எல்லா பணிகளையும் கவனித்து வருகிறாராம். கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை செய்து வர திட்டமிட்டுள்ளாராம்.
பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளைப் போல் தொண்டர் படையை உருவாக்க அவர் யோசனையில் இருக்கிறாராம். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் ஏற்கெனவே தொண்டர் படை இருக்கிறது.
இந்த தொண்டர் படையின் பணியானது எங்கெல்லாம் கட்சி சார்பில் கூட்டம்,பேரணி நடக்கிறதோ அங்கெல்லாம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது ஆகும். அந்த வரிசையில் தவெகவும் தற்போது தொண்டர் படை அமைத்து தொண்டர் படையில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் தற்போதைய சூழலில் கரூர் வழக்குப் பிரச்சினையால் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதனால் விரைவில் 2ஆம் கட்ட தலைவர்கள் பட்டியலை விஜய் வெளியிடுகிறாராம்.
அந்த பட்டியல் வெளியான பிறகு 2ஆம் கட்ட தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள் தமிழகம் முழுவதும் தவெகவினருக்கு அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துதல், அரசியல் செயல்பாடுகளை எதிர்கொள்ளுதல், தேர்தல் பணியாற்றுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிப்பார்களாம். இதையடுத்து தொண்டர் படை குறித்த அறிவிப்பும், அதற்கான பயிலரங்கம் எங்கெங்கு நடக்கும் என்பது குறித்த தகவலும் வெளியிடப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications