கண்ணாடி ரூமில் பூட்டப்பட்ட பெண்.. நடிகர் விஜய்க்கு சிக்கல்.. அப்ப மாநாடு? சீறுது இந்து மக்கள் கட்சி
சென்னை: தனது தொண்டர்கள், இளைஞர்களின் உழைப்பில் பதவி சுகத்துக்காக அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைத்து கேள்விக்குறியாக்க நினைக்கும் நடிகர் விஜய் நடத்தும் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், நடிகர் விஜய், தமிழக இளைஞர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய் இந்துக்களை பிளவுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன.. ஏற்கனவே அரசியலில் தடம் பதித்து இருக்கும் திமுகவின் ஜெராக்ஸ் காபி போல விஜய் செயல்படுவதாக விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

ஓணம் : ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லையே என்று தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, எல்.முருகன், உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்..
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியும் கண்டனத்தை தெரிவித்து கேள்வி எழுப்பியிருந்தது.. இந்துக்களுக்கு எதிரான விஜயின் அரசியல் செயல்பாடுகள் தொடருமேயானால், அரசியலில் உச்சம் தொட நினைக்கும் அவரது கனவு மாளிகையை இந்துக்கள் தகர்த்தெறிவார்கள்" என்று தெரிவித்திருந்தது.
புஷ்பா: இந்நிலையில், கடந்த வாரம் கும்பகோணத்தில், புஸ்ஸி ஆனந்த் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது, புஷ்பா என்ற பெண் குறுக்கிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவர் தஞ்சை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்த தங்கதுரை என்பவரின் சகோதரி என தெரிகிறது.
விஜய் ரசிகர் மன்றத்தில் பல ஆண்டுகளாக தன்னுடைய சகோதரர் நிர்வாகியாக இருந்தும் அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்படாதது ஏன்? தவெக கட்சி போர்டே தங்கள் நிலத்தில் உள்ளபோதும், சகோதரனுக்கு கட்சியில் எந்த பதவியும் வழங்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கண்ணாடி அறை: இதையடுத்து அங்கிருந்த பவுன்சர்கள் சிலர் அந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று அங்கிருந்த கண்ணாடி அறையில் அடைத்ததால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும், புஸ்ஸி ஆனந்தும் பேச்சை முடிக்காமலேயே பாதியிலேயே அங்கிருந்து கிளம்பி சென்றதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன,
இந்நிலையில், நடிகர் விஜய், தமிழக இளைஞர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். மாநாட்டுக்கு முன்பாக மன்னிப்புக் கேட்காத பட்சத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பாக மாநில பொதுச்செயலாளர் டி.குருமூர்த்தி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

புஸ்ஸி ஆனந்த்: அந்த அறிக்கையில், "நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள முதல் மாநில மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த், அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய போது, "இளைஞர்களை வேலையை விட்டு விட்டு மாநாட்டுக்கு வர வேண்டும்" எனப் பேசி உள்ளார்.
இதேபோல் கும்பகோணத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெண் ஒருவர் "எனது சகோதரன், நடிகர் விஜயை நம்பி, மன்றம் தொடங்கி அதற்காக செலவு செய்ததால், தற்போது எனது குடும்பம் நடுத்தெருவில் உள்ளது" என முறையிட்டார். அப்போது, அங்கிருந்த பவுன்சர்கள், அந்தப் பெண்ணை அறைக்குள் அழைத்துச் சென்று பூட்டினர்.
முற்றுகை: தனது தொண்டர்கள், இளைஞர்களின் உழைப்பில் பதவி சுகத்துக்காக அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைத்து கேள்விக்குறியாக்க நினைக்கும் நடிகர் விஜய் நடத்தும் மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். நடிகர் விஜய், தமிழக இளைஞர்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மாநாட்டுக்கு முன்பாக மன்னிப்புக் கேட்காத பட்சத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டை முற்றுகையிடுவோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விஜய்யை விமர்சித்திருந்த இந்து மக்கள் கட்சி, "இந்து தெய்வங்களை விமர்சிப்பது, இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதோடு சாதி ரீதியாக இந்துக்களைப் பிளவுபடுத்தி ஓட்டு அரசியல் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜயும் இணைந்திருப்பது 'பழைய மொந்தையில் புதிய கள்ளு' என்பதையே நினைவுப்படுத்துகிறது" என்று காட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications