நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை நாளை மறுநாள் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த அறிமுக விழா நடக்கவுள்ளதாகவும், இந்த விழாவில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல் நாதக வேட்பாளர்கள் பிப்ரவரி மாதமே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டனர்.

ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்த போதும் கூட, தவெக தலைவர் விஜய் இன்னும் பிரச்சாரத்திற்காக கூட வெளியில் வரவில்லை. இதனிடையே பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் பெரம்பூர் தொகுதியில் இருந்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் தவெகவின் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில் தவெக வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். தற்போது மார்ச் 29ஆம் தேதி (நாளை மறுநாள்) 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சாமானிய மக்களோ, தவெக கட்சி தொண்டர்களோ பங்கேற்க முடியாது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்க உள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட 500 பேர் தவிர்த்து வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவெகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை கூட பொதுவெளியில் நடத்தாமல், தனியார் ஹோட்டலில் நடத்துவது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications