சென்னையில் கடும்‛டிராஃபிக்’..கோயம்பேடு-மதுரவாயல் சாலையில் 4கிமீ-க்கு நிற்கும் வாகனங்கள்!மக்கள் அவதி
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏராளமானவர்கள் சொந்த ஊர் புறப்பட்டு செல்வதால் சென்னை கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதன்பிறகு நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையாகும். இதனால் சென்னையில் வசிக்கும் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

சென்னையில் உள்ள ஐடி உள்பட பல நிறுவனங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இப்படி விடுமுறை வழங்கப்பட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இன்று, நாளை (விநாயகர் சதுர்த்தி), நாளை மறுநாள் என 3 நாள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கிறது. இதனால் பலரும் நேற்றே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
அதேவேளையில் பல நிறுவனங்கள் விநாயகர் சதுர்த்தியான நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் விடுமுறை வழங்கி உள்ளனர். இந்த விடுமுறையை பெற்ற ஊழியர்கள் இன்று மாலையில் இருந்தே சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கி உள்ளனர். இதனால் சென்னையில் உள்ள பல சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக இன்று மாலையில் சென்னை கோயம்பேடு - மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கத்தை விட ஏராளமான வாகனங்கள் அந்த சாலையில் பயணித்ததால் இந்த போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டுள்ளது. சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கின்றனர். மெல்ல மெல்ல வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
இன்று மாலை 4.30 மணி நிலவரப்பட்டி கோயம்பேட்டில் இருந்து ஏரிக்கரை சிக்னல் சந்திப்பு வரை சுமார் 4 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. அதேபோல் கோயம்பேடு - மதுரவாயல் சுங்கச்சாவடியில் பலநூறு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் நேரம் ஆக ஆக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் மாலை 5 மணி, மாலை 6 மணிக்கு அலுவலக பணியை முடித்து பலரும் வீடுகளுக்கு திரும்புவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இந்த போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications