தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்களா?.. வதந்திக்கு அளவே இல்லையா?.. மக்களே நம்பாதீர்.. வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் அது வதந்தி என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் இந்த பருவமழையின் முதல் புயலாக நிவர் புயல் வந்தது. இது நல்ல மழையை கொடுத்தது.
ஆனால் சிறிதளவு சேதத்தையே கொடுத்தது. அடுத்ததாக புரேவி எனும் புயல் உருவானது. இந்த புயல் பாம்பன் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

மன்னார் வளைகுடா
ஆனால் அந்த புயல் கடலிலேயே வலுவிழந்துவிட்டது. எனினும் மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருப்பதால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என மழையை கொடுத்தது. கடலூர், புதுவை, சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூழ்கி வீணாகியுள்ளன.

தண்ணீர்
வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. சென்னை புறநகரில் ஆங்காங்கே இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். நிவரும் புரேவியும் அடுத்தடுத்து வந்ததால் தண்ணீர் வடியாமல் பயிர் சேதமடைந்தும் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

புயல் மாநிலம்
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வருவதாக வாட்ஸ் ஆப்களில் வதந்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது டிசம்பர் 8-ஆம் தேதி தாக்டே புயல், டிசம்பர் 17-ஆம் தேதி யாஸ் புயல். டிசம்பர் 24-ஆம் தேதி குலாப் புயல், ஜனவரி 1-ஆம் தேதி ஜவாத் புயல் வரலாம் என்றும் தமிழகம் ஒரு புயல் மாநிலமாக உருவாகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.

போலி மெசேஜ்
இதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மறுத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். எதையும் பார்வேர்டு செய்யாதீர்கள், இது போன்று ஒரு மெசேஜ் வந்தால் அது பக்கா போலி மெசேஜாகத்தான் இருக்கும். இதெல்லாம் வாட்ஸ் ஆப் பல்கலைக்கழகத்தின் மற்ற உறுப்பினர்களால் கிளப்பப்படுகிறது என்றார்.


Click it and Unblock the Notifications
