மகாபலிபுரத்தில் அந்த திமிங்கலத்தை பார்த்தீங்களா? அதென்ன எலும்பா? வீடியோவை பார்த்து ஆடிப்போன மக்கள்
சென்னை: நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, எண்ணற்ற விலங்கினங்கள் இருந்த நிலையில், தற்போது அதில் பாதி உயிரினங்கள் இருப்பதற்கான அடையாளமே தெரியாத அளவுக்கு ஆகிவிட்டன. இன்னும்கூட பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன... எனவேதான், உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக உள்ளது.. அந்தவகையில், மாமல்லபுரத்தில் 2 பேர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும்வகையில், வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்..

அரியவகை கடல் ஆமைகள், டால்பின்கள், கடல்பசு, கடல் குதிரை, கடல் அட்டைகள், அரியவகை சங்குகள், சிப்பி, சோழிகள் உள்ளிட்ட உயிரினங்கள் தங்களுடைய வசிப்பிடமாக கொண்டுள்ளன.
இதில், தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவும், கடல்வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது குறித்து வனத்துறையின் மூலம் கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு, கருத்தரங்கம் போன்றவையும் நடத்தப்பட்டு வருகிறது.
கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்
அதேபோல கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், தின்பண்ட கழிவுகளை கடலில் போடக்கூடாது. அவ்வாறு விழும் பொருட்களை மீன்கள், ஆமைகள் உள்ளிட்டவைகள் இரை என நினைத்து விழுங்கிவிடுவதால் ஆபத்தில் முடிகிறது. எனவே இதுகுறித்தெல்லாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வருகிறார்கள்..
அத்துடன், இறந்து கரை ஒதுங்கும் ஆமை போன்ற உயிரினங்களை கண்டால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தந்தால் அவர்கள் விரைந்து வந்து அப்புறப்படுத்தி விடுவார்கள்.
எனினும்கூட சிலர் கடல்வாழ் உயிரினங்களை பிடித்து வெளிநாடுகளுக்கு கடத்துவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதில், இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கலம் உள்ளது. கடலில் இருந்து திமிங்கலத்தை பிடித்து, விற்பனை செய்வதும், அதன் உடல் பாகங்களை மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதும் சட்டப்படி குற்றமாகும். திமிங்கலத்தின் எலும்புகளை வீட்டில் வைத்திருக்க, யாருக்கும் அனுமதி கிடையாது.
கடல் தங்கம் - திமிங்கலத்தின் உமிழ்நீர்
அதிலும், திமிங்கலத்தின் உமிழ் நீரை கடத்துவது அதிகரித்தபடியே உள்ளது.. ஆம்பர் கிரீஸ், உயர்ரக வாசனை திரவியங்கள் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களில், வாசனைக்காக திமிங்கலத்தின் எச்சம் பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு மிக அதிகம். அதனால்தான் இதனை கடல் தங்கம் என்றும் சொல்கிறார்கள்..
இப்படிப்பட்ட சூழலில், திமிங்கலத்தின் எலும்பை கையில் வைத்து கொண்டு, இளைஞர்கள் சிலர் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட போட்டோவை பார்த்ததுமே இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்..
திமிங்கலத்தின் எலும்பு
மாமல்லபுரத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள், திமிங்கலத்தின் எலும்புடன், வீடியோ ஒன்றையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்திருக்கிறார்கள்..
அத்துடன், அந்த வீடியோவில் இளைஞர் பேசும்போது, :"மாமல்லபுரம் பகுதிக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. திமிங்கலத்தின் எலும்பு, எவ்வளவு பெரிசு பார்த்தீங்களா? இதை வைத்து நான் எந்த சம்பவமும் பண்ணப்போவது கிடையாது. இதை நீங்கள் பார்த்திருந்தால் அதை பற்றி கமெண்ட் பண்ணுங்க.. என் நண்பன், எனக்கு அன்பளிப்பாக 15 வருடங்களுக்கு முன்பு தந்தது" என்று தெரிவித்துள்ளார்.
அரசுக்கு கோரிக்கை
இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகி உள்ளது.. திமிங்கலத்தின் எலும்புகளை பார்த்தால், சட்டவிரோதமாக வேட்டையாடி கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் உள்ளதால் வனத்துறையினர் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்புதான் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் என்ற திமிங்கல எச்சத்தை போலீஸார் பறிமுதல் செய்திருந்த நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை மாமல்லபுரத்தில் கிளம்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications