ஹோம் லோன்! வீடுகளை கட்டி வாடகைக்கு விடலாமா.. "கேட்க நல்லா தான் இருக்கு ஆனா.." ஆனந்த் சீனிவாசன் பகீர்
சென்னை: கடன் பெற்று வீடு வாங்கிவிட்டு, அதை வாடகைக்கு விடுவது சரியானதாக இருக்கும் என்று இப்போது பலரும் கருதி வரும் நிலையில், இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் பொதுவாகச் சொந்த வீடு வாங்குவது என்பது பலருக்கும் வாழ்நாள் லட்சியமாக இருக்கும். சொந்த வீடு என்பது முதலீடு அல்லது இருக்க ஒரு இடம் என்பதை தாண்டி, அதை அவர்கள் எமோஷனலான ஒன்றாகப் பார்ப்பார்கள்.

இதன் காரணமாகவே எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி ஒரு வீட்டை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பது பல கோடி இந்தியர்களின் லட்சியமாக இருக்கிறது. ஆனால், சந்தை நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் வீடு வாங்கக் கடன் வாங்கப் போய் சிக்கல்களிலும் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஆனந்த் சீனிவாசன்: தற்போது இருக்கும் சூழலில் பிளாட் வாங்குவது சரியான முடிவாக இருக்காது என்று கடந்த காலங்களில் ஆனந்த் சீனிவாசன் பல முறை கூறியிருக்கிறார். இதற்கிடையே ஊருக்கு வெளியே ஒரு நிலத்தை வாங்கி, அதில் லோன் போட்டு வீடு கட்டி வாடகைக்கு விடுவது நல்லதா.. அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்குமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
அதாவது லோன் வாங்கி வீடு கட்டி அதை வாடகைக்கு விடும் போது, வாடகை தொகையை வைத்தே வீட்டுக் கடனை கட்டி விடலாம். எனவே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நிலமும் கட்டிடமும் நமக்கானதாக மாறிவிடும் என்பதால் பலருக்கும் இப்படிச் செய்யலாமா என்ற சந்தேகம் இருக்கவே செய்கிறது. இது தொடர்பாகத் தான் ஆனந்த் சீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் தெளிவாக விளக்கியுள்ளார்.
ரொம்ப கஷ்டம்: இது குறித்து அவர் தனது வீடியோவில், "நாங்கள் பல தலைமுறைகளாக வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளோம். இப்படி வீடுகளை வாடகைக்கு விடுவது என்பது அவ்வளவு சுலபமானது இல்லை. அந்த வாடகையை வசூல் செய்து பார்த்தால் தான் அது எவ்வளவு கஷ்டம் என உங்களுக்குப் புரியும். பெரிய கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்தும் கூட வாடகை வசூலிப்பது ரொம்பவே கடினம்.
நீங்கள் கட்ட வேண்டிய லோன் இஎம்ஐ ஒன்றாம் தேதி கட்ட வேண்டி இருக்கும். ஆனால் வாடகை ஒன்றாம் தேதி வரவே வராது. அடுத்து வாடகை மூலம் கிடைக்கும் வருவாய் என்பது 3- 4% தான் இருக்கும். அதேநேரம் லோன் வட்டி 8-9% இருக்கும். அந்த இடைப்பட்ட பணத்தை நீங்கள் உங்கள் சம்பளத்தில் இருந்து கட்ட வேண்டி இருக்கும்.
முறைப்படுத்தப்படாத சந்தை: அடுத்து வீடு ஊருக்கு வெளியே இருந்தால் வாடகைதாரர் சிறு புகார் சொன்னால் நேரடியாகச் சென்று பார்க்கவே சில ஆயிரம் வரை ஆகும். எனவே, இதுபோல பண்ண முடியும் என்றெல்லாம் கனவு காண வேண்டாம். இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு விடுவது என்பது முறைப்படுத்தப்படாத சந்தையாகவே இருக்கிறது. எனவே, இதற்கு எல்லாம் வாய்ப்பில்லை.
அமெரிக்காவில் முன்பெல்லாம் லோன் வட்டி 0% ஆக இருந்தது. அப்போது ஒரு வீட்டை வாங்கி, அதை வாடகைக்கு விட்டே அந்த மொத்த கடனையும் அடைத்துவிடலாம் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது வட்டி விகிதம் அமெரிக்காவிலேயே 5% தாண்டி விட்டது. எனவே, தற்போதைய சூழலில் அமெரிக்காவிலேயே இதைச் செய்ய முடியாது.
அங்கே எல்லாம் நிலைமை வேறு: அடுத்து அமெரிக்காவைப் பொறுத்தவரைப் பெரும்பாலானோர் அங்கே வீட்டு லோனை கட்டவே மாட்டார்கள். சாகும் வரை ஒரு லோனை அடைக்க மற்றொரு லோன், அதை அடைக்க மற்றொரு லோன் என்று நீட்டித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்தியாவில் ரியல் எஸ்டேட் வீடு சந்தை அவ்வளவு வளர்ச்சியடைந்ததாக இல்லை. எனவே, இதை எல்லாம் முயல்வது சரியானதாக இருக்காது" என்றார்.
இது ஒரு சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications