ஸ்டாலினுக்காக ஓடிவந்த பிரபலம்.. "எழவு வீட்டில் கிடைத்தவரை லாபம்": எடப்பாடியிடம் சீறியது யார் பாருங்க
சென்னை: எழவு வீட்டில் கிடைத்த வரை லாபம் என்ற பழமொழி போல், எடப்பாடி பழனிசாமி கேவலமாக அரசியல் செய்வதாக தமிழக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பூதாகரமாக வெடித்துவிட்ட நிலையில், தமிழக மக்கள் அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் உள்ளனர். இந்த விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே கண்டனம் தெரிவித்துள்ளன.

கூட்டணி கட்சிகள்: கூட்டணி கட்சிகளே இப்படியென்றால், எதிர்க்கட்சிகள் அதற்குமேல் தங்கள் கொதிப்பை கொட்டி வருகின்றன.. இது தொடர்பாக தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து, திமுக அரசை விமர்சித்து வருகிறார்கள்.
அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது மட்டுமல்லாமல், கூட்டணி கட்சிகளையும் சேர்த்தே அட்டாக் செய்து பேசியிருந்தார்..
மன்னிக்க மாட்டார்கள்: செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "இவ்வளவு மரணம் ஏற்பட்டிருக்கிறது, ஆனால், திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவில்லை. 25 வருடங்கள் கூட்டணி தொடரும் என்ற காங்கிரஸ் கட்சிக்கு எது நடந்தாலும் கவலையில்லை. அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் மட்டும் முக்கியம்.
கம்யூனிஸ்ட்கள் மேம்போக்காக பேசியிருக்கிறார்கள். திருமாவளவன் கட்சி, போராட்டத்தை அறிவித்திருக்கிறது. இதனால், என்ன பயன்? தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வையுங்கள்.. அது முடிந்ததுமே மக்களுக்காக குரல் கொடுங்கள். ஆளுங்கட்சிக்கு மட்டும் துணை போயிடாதீங்க.. இல்லாட்டி மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மொத்தத்தில் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது" என்று கூறியிருந்தார்.
ரஞ்சன் குமார்: எடப்பாடியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக மற்றும் கூட்டணி தரப்பினர் பதிலடி தந்துவருகிறார்கள்.. அந்தவகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தது முதல் பாரபட்சமின்றி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தும், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால வாழ்க்கையை கவனத்தில் கொண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவது அவரது தொடர் நடவடிக்கையின் மூலம் தெரியும். சட்டசபையில் விவாதிக்க அழைத்தும் வராத எடப்பாடி பழனிசாமி, மரணத்திலும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
வெளிப்படை பேச்சு: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது, ஊடகத்தில் செய்தியை பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்றவர் தான் இந்த பழனிசாமி. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது போன்ற சூழலில் அரசுக்கு பக்கபலமாக நின்று, சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டியது பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பணி.
அதேசமயம், செல்வப்பெருந்தகை கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, தந்தையை, பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை காங்கிரஸ் ஏற்கும் என்று அறிவித்திருக்கிறார். இதுதான் சிறந்த ஆளுமை கொண்ட அரசியல் தலைவருக்கான லட்சணம்.
எழவு வீடு: ஆனால், எழவு வீட்டில் கிடைத்த வரை லாபம் என்ற பழமொழி போல், எடப்பாடி பழனிசாமி கேவலமாக அரசியல் செய்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்தித்து காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு சார்பாக எங்களால் இயன்ற உதவிகளை வழங்க இருக்கிறோம். எனவே, இந்த இக்கட்டான சூழலில் முதல்வர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications