கருணாநிதி சாதித்தது என்ன? தமிழக வளர்ச்சிக்கு செய்தது என்ன? தெரியுமா உங்களுக்கு?
சென்னை: திமுக முன்னாள் தலைவர் மு கருணாநிதிக்கு நாளை நினைவுநாள் நடைபெற உள்ளது. அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகக் கொண்டு வந்த சிறப்பான திட்டங்கள் என்ன? அவரது சாதனைகளைப் புரிந்து கொள்வது எப்படி?
'தமிழ்நாட்டின் சிற்பி’ என்று திமுகவினர் மு.கருணாநிதியை அழைக்கிறார்கள். அந்த அடைமொழிக்குப் பின்னால் சில வரலாற்று காரணங்கள் இருக்கின்றன. ஏறக்குறைய 5 முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்திருக்கிறார் மு.கருணாநிதி. திமுக நிறுவனர் அண்ணாதுரை மறைவை அடுத்து இவர் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் முறையாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வராகப் பதவியேற்ற போது இவருக்கு 45 வயது. இவர் கடைசியாக 2011 மே 13 ஆம் தேதி 5ஆவது முதல்வர் பதவியை விட்டு விலகிய போது 87 வயது. கிட்டத்தட்ட 44 ஆண்டு காலம் இவர் அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்.

கருணாநிதியின் ஆரம்பக் கால ஆட்சியில், அதாவது 1969 முதல் 1976 வரை, சமூக சீர்திருத்தத் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் ஊதிய சட்டம், 1969 கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கவும், கூலித் தொழிலாளர்களைச் சுரண்டியே கொழிக்கும் நிலக்கிழார்கள் மீது அபராதம் விதிக்கவும் வழி ஏற்படுத்தித் தந்தது. அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை ஜில்லாவில் நிலவிவந்த நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்தை நேரடியாகக் கண்டு வளர்ந்தவர் கருணாநிதி. மேலும் கீழ்வெண்மணியில் நடந்த விவசாயிகள் படுகொலை திமுக ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கக் காரணமாகி இருந்தது. அதை உணர்ந்த கருணாநிதி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தும் இச்சட்டத்தை முதல் வேலையாகக் கொண்டுவந்தார்.
அடுத்து இவரது ஆட்சியில்தான் நிலச் சீர்திருத்தங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது நிலம் வைத்திருப்பதற்கான உச்சவரம்பு குறைப்பு குறைத்தது. இச்சட்டம் 1970 நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக இருந்த நில உச்சவரம்பு வரம்பை 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராகக் குறைத்தார். இதனால் நில உடைமைகளில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்பட்டன. 1952 களிலேயே நெசவாளர்கள் பிரச்சினை, அரிசி பஞ்சம், வறுமை எனப் பல போராட்டங்களைக் கையில் எடுத்த திமுகவுக்கு ஆட்சிக்கு வந்த பிறகு எதை இலக்காகக் கொள்ள வேண்டும்? எதை அளவீடாக வைக்க வேண்டும் என்ற புரிதல் தெளிவாக இருந்தது.
1957 ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்த கருணாநிதி இறக்கும் வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். ஒரு முறைகூட அவர் தேர்தலில் தோல்வி அடைந்ததில்லை. இவரது சாதனை இந்திய அரசியலில் தனித் தன்மையானது. நேருவை எதிர்த்து அரசியல் செய்யத் தொடங்கிய கருணாநிதி, கடைசியாக விஜயகாந்த் வரை இடைவிடாமல் இயங்கினார்.
தனது ஆட்சிக்காலத்தில் அவர் தனித்துவமான பல திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தினார். 'பராசக்தி’ படத்தில் பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை கேட்டு வசனம் எழுதிய கருணாநிதி அவரது ஆட்சியில் தொழு நோயாளிகளுக்கு மறுவாழ்வு முகாம் அமைத்தார். கை ரிக்ஷாக்களை ஒழித்தார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கும் ஒரு கிலோ அரிசியை ரூ.1க்கு கொடுத்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் 5 முட்டைகளைச் சேர்த்தார். மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளைத் தொடங்க முதல் விதையைப் போட்டார். கர்ப்பிணிப் பெண்களுக்கு 10,000 ரூபாய் உதவித் தொகை அளித்தார். அரசு வேலைகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளித்தார். தாய் வீட்டுச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை தரச் சட்டம் கொண்டு வந்தார். உயிர்காக்கும் சிகிச்சைக்கான இலவச காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தினார்.
ஆட்சிக்கு வந்த ஆரம்பக் காலத்தில் கருணாநிதி சில முக்கியமான கமிஷன்களை அமைத்தார். அண்ணாதுரை காலத்திலிருந்தே திமுக மாநில சுயாட்சியை முன்வைத்துப் போராடி வந்தது. ஆகவே அண்ணாதுரைக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த இவர் 'மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக’ அமைத்தார். அந்தக் குழு மாநில பட்டியலில் என்ன அதிகாரங்களை மத்திய பட்டியலிலிருந்து மாற்றலாம் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கியது.
1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக முதலமைச்சரான கருணாநிதி டெல்லி சென்றார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைப்பது குறித்து தனது அரசாங்கம் பரிசீலிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர், ஆகஸ்ட் மாதம், அவர் மூன்று அமைப்பை உருவாக்க இருப்பதாக அறிவித்தார். அதன்படி ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. மே 27, 1971 அன்று ராஜமன்னார் கமிட்டியின் சில பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது. கூட்டாட்சிக்கான ஒரு விரிவான வரைபடத்தை வகுத்துக் கொடுத்தது. மாநில அதிகாரத்தை உயர்த்தும் அளவுக்குத் தொலைநோக்குடன் சிந்தித்த கருணாநிதி ஏதோ சிகாகோவில் படித்து பட்டம் பெற்றவர் இல்லை. அவர் பள்ளிப்படிப்பைக் கூட சரியாக முடிக்காதவர் என்பதைச் சேர்த்து இங்கே யோசித்துப் பார்க்க வேண்டும்.
இந்தப் படிக்காத மேதைதான் இந்தியாவில் முதன் முதலாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். சிறுவயதில் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வாழ்க்கையைக் நடத்திய கருணாநிதி தமிழ்நாட்டில் சாப்ட்வேர் துறை கால் பதிக்க அஸ்திவாரம் போட்டுக்கொடுத்தார். டைடல் பார்க் என்ற ஒரு பெரிய புரட்சியை இந்தியாவில் நிகழ்த்திக் காட்டினார்.
அருந்ததியர் 3%உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து அதை உறுதி செய்ததும் இவர் தான். இதன் மூலம் இந்தியாவே இன்று இவரைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்பது கருணாநிதியின் கனவுத் திட்டம். அதற்காகத் தனிச் சட்டமும் இயற்றினார். உச்சநீதிமன்றம் இந்தச் சட்டத்தை உறுதிப்படுத்தியது. இன்று பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு பல சாதியைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இறுதிக் காலம் வரை வாழ்ந்து வந்த கருணாநிதி அதிகம் நம்பிக்கை வைத்தது மக்களின் மீதுதான். அந்த மக்கள் சக்தியால் அவர் இறுதிவரை சிம்மாசனத்தை விட்டு இறங்காமலிருந்தார்.












Click it and Unblock the Notifications