கேப்பே விடாத எடப்பாடி.. பொதுச்செயலாளர் ஆன அடுத்த நொடியே.. ஓபிஎஸ் அஸ்திவாரத்தையே "அசைக்க" முடிவு?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றிபெற்ற எடப்பாடி பழனிசாமி முக்கியமான பல திட்டங்களை கையில் எடுக்க போவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இன்றே அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அறிக்கை
இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன உடனேயே எடப்பாடி பழனிசாமி முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அதிமுகவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பாக அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 - புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.

என்ன சொன்னார்?
கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டு உள்ளார். அதிமுக பொதுச்செயலர் ஆன பின் அவர் வெளியிடும் முதல் அறிக்கை ஆகும் இது. இதிலேயே அவர் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். நிர்மல் குமார் உள்ளிட்ட அதிமுகவில் இணைந்த புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை தொடங்கி பதவிகள் வரை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

நிர்வாகிகள் சேர்க்கை
விரைவில் கட்சியில் நிர்வாகிகள் பலர் சேர்க்கப்பட உள்ளனர். அதன் ஒரு கட்டமாக தற்போது உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் ஆட்களையும் உள்ளே இழுக்கவும் எடப்பாடி பழனிச்சாமி இந்த அஸ்திரத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது அவர்களுடன் சேர்த்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளையும் எடப்பாடி சேர்த்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது. அதாவது ஒன்றுபட்ட அதிமுக கோஷத்துடன் ஓபிஎஸ் அணியினர் அதிமுக எடப்பாடி தலைமையை ஏற்க வாய்ப்புள்ளது.

அறிவிப்பு
அதற்கான அறிவிப்பு விரைவில் எடப்பாடி தரப்பில் வெளியாகும் என்று. ஓபிஎஸ் அணியில் அவரை தவிர மற்ற நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இணையும் வாய்ப்பு இதன் மூலம் அதிகரிக்கும். ஓபிஎஸ் அணி நாவலர் நெடுஞ்செழியன் நால்வர் அணி முன்பு இருந்தது போல போல் ஒன்றுமில்லாமல் போகவும் வாய்ப்பும் உள்ளது. இப்போது உறுப்பினர் சேர்க்கை மூலம் நிர்வாகிகளை உள்ளே இழுத்த ஓ பன்னீர்செல்வத்தை தனித்து விடும் முயற்சிகளை எடப்பாடி எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

சேர்த்துக்கொள்வீர்களா?
ஏற்கனவே அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு.. எங்களை விட்டு போன ஒரு சிலரை சேர்த்துக்கொள்வோம். கட்சி நிர்வாகிகள் சிலரை சேர்த்துக்கொள்வோம். ஆனால் ஒரு சிலரை நாங்கள் சேர்த்துக்கொள்ளும் திட்டத்தில் இல்லை. குறிப்பிட்ட சிலரை தவிர்த்து மற்றவர்களை சேர்த்துக்கொள்வோம் என்றார். அதனால் எடப்பாடி பெரும்பாலும் ஓ பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு அவருடன் இருக்கும் மற்ற நிர்வாகிகளை கட்சிக்குள் இழுத்து ஓ பன்னீர்செல்வத்தை தனித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications