பொன்னையன் வெறும் டிரைலர் தான்! இனிமேல் தான் கச்சேரியே! பொங்குவதற்கு தயாராகும் அதிமுக வி.ஐ.பி.க்கள்!
சென்னை: பாஜகவுக்கு எதிராக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பொங்கியதற்கு பின்னணியில் ராஜ்யசபா சீட் விவகாரம் இருக்கிறதாம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சீட் எதிர்பார்த்த பொன்னையனிடம் ராஜ்யசபா தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்கிறோம் என அதிமுக தலைமை நம்பிக்கை கொடுத்திருக்கிறது.
ஆனால் இப்போது சீட்டே கேட்காத ஒருவருக்கும், ஏற்கனவே பசையாக உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் சீட் கொடுக்கப்பட்டது பொன்னையனை பொங்கி எழ வைத்திருக்கிறது..

பொன்னையன் பேச்சு
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன், தமிழகத்தில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றும் அதிமுக தான் எதிர்க்கட்சியே தவிர பாஜக கிடையாது எனவும் கூறினார். மேலும், பாஜகவை விமர்சிக்கும் வகையில் தனது பேச்சில் அனல் கக்கினார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் உள்ள நிலையில் பொன்னையன் இப்படி பேசியது அவ்விரு கட்சிகளின் தலைமைக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது.

அதிமுக வி.ஐ.பி.க்கள்
பாஜகவுக்கு எதிராக பொன்னையன் பற்ற வைத்த தீ அதிமுகவில் மெல்ல பரவி வருகிறது. அதன் எதிரொலியாக தான் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜகவை காக்கா கூட்டம் என விமர்சித்துள்ளார். அதிமுக வி.ஐ.பி.க்கள் இப்படி வரிசையாக பாஜகவுக்கு எதிராக பொங்க தொடங்கியிருப்பதற்கு காரணம் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். மீதிருக்கும் அதிருப்தியே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப்படி என்ன அதிருப்தி என விசாரித்தால் ராஜ்யசபா சீட் தான் காரணம் என கைகாட்டப்படுகிறது.

ராஜ்யசபா சீட்
கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர் பொன்னையன். கட்சியில் சீனியர் தலைவர்களில் அவரும் ஒருவர். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தாலும் கூட பெரியளவில் தன்னையோ தனது குடும்பத்தையோ வளப்படுத்திக் கொள்ளாதவர். இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பொன்னையன் சீட் எதிர்பார்த்திருக்கிறார். அப்போது ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

சீட் இல்லை
பொன்னையனும் அதிமுகவுக்கான இரண்டு ராஜ்யசபா இடங்களில் ஒரு இடம் எப்படியும் தனக்கு கிடைத்துவிடும் என ஏக நம்பிக்கையில் இருந்திருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக முடிவுகள் வந்ததால் தலைமைக்கு எதிராக பொங்கி எழுந்ததுடன், தான் யார் என்பதை காட்டுகிறேன் என்கிற வகையில் பாஜகவை போட்டுத்தாக்கி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.ஸை அதிர வைத்துள்ளார். தன்னுடன் அமைசரவையில் சக அமைச்சராக இருந்த தம்பிதுரைக்கு எல்லாம் ராஜ்யசபா சீட் கொடுத்த போது தாம் மட்டும் எந்த விதத்தில் குறைந்துவிட்டேன் என நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications