தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில் தென்சென்னை தொகுதியில் 10% வரை வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த முறை லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஒட்டுமொத்தமாக சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு 39 தொகுதிகளில் 72% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

இதில் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் பலரையும் கவனிக்க வைத்துள்ளது. மற்ற தொகுதிகளை விடச் சென்னையில் வாக்குப்பதிவு குறைவு என்றாலும் கூட கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது ரொம்பவே அதிகம்.
3 தொகுதிகள்: சென்னையில் மொத்தம் 3 தொகுதிகள் இருக்கும் நிலையில், வட சென்னையில் ஒப்பீட்டளவில் எப்போதும் வாக்குப்பதிவு அதிகமாகவே இருக்கும். 2009, 2014, 2019 ஆகிய மூன்று லோக்சபா தேர்தல்களிலும் வட சென்னையில் 64% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 69% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மத்திய சென்னையில் கடந்த முறை 58% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 67% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
ஆனால், சென்னையில் கவனிக்க வைக்கும் தொகுதி என்றால் அது தென் சென்னை தான். அங்குக் கடந்த முறை மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக 57% வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த முறை சுமார் 10% அதிகரித்து 67.82% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தென்சென்னையில் வாக்குப்பதிவு இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
காரணங்கள்: வழக்கமாகச் சென்னையில் திமுக அதிமுக என்று இரண்டு முனை போட்டி தான் இருக்கும், ஆனால் இந்த முறை பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கி உள்ளதால் அது மும்முனை போட்டியாக மாறி இருக்கிறது. தமிழிசை சவுந்தரராஜன் நட்சத்திர வேட்பாளர்.. மேலும் தமிழக மக்களுக்கு ரொம்பவே தெரிந்த முகம்.
இது மட்டுமின்றி தென் சென்னை என்பது தென்தமிழகம் மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை உள்ளடக்கியது. குறிப்பாக வியாபார சமூகம் அதிகம் இருக்கும் தொகுதி. தமிழிசை பிரச்சாரத்திலேயே கூட இந்த வியாபார சமூகத்தினரை அதிகம் பார்க்க முடிந்தது. தமிழிசை டீம் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆதரவாளர்களாக மாற்றியுள்ளனர்.
மும்முனை போட்டி: இதன் காரணமாகவே தமிழிசை பிரச்சாரத்தில் அவர்களை எழுச்சியுடன் பார்க்க முடிந்தது. இவர்கள் அதிகம் வாக்களிக்க வந்ததே வாக்குப்பதிவு 10% அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதாவது அங்கே திமுக, அதிமுக என இரு முனை போட்டியாக மட்டும் இருந்து இருந்தால் இந்தளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்திருக்காது.
எகிறும் எதிர்பார்ப்பு: அங்கு பாஜக சார்பில் தமிழிசையும் களமிறங்கி அவர் இந்த தென்தமிழக மக்களைக் கவர் செய்ததே வாக்குப்பதிவு இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது..இதனால் இப்போது அந்த தொகுதியில் போட்டி கடுமையாக மாறி இருக்கிறது. போட்டி கடுமையாக இருப்பதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி இந்த தொகுதியின் மீது கவனம் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications