ஜெகத்ரட்சகன் இருக்கும் போதே.. வீட்டிற்குள் போன ஐடி அதிகாரிகள்.. மூடப்பட்ட "ஸ்கிரீன்".. என்ன நடந்தது?
சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
2019 லோக்சபா தேர்தலில் நிற்கும் போது தன்னுடைய சொத்து மதிப்பாக 110 கோடி ரூபாய் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கணக்கு காட்டினார். அதோடு தனது மனைவிற்கு 43 கோடி ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால் அதன்பின் அவரின் சொத்துக்கள் வேகமாக உயர்ந்ததாக புகார் வைக்கப்படுகிறது. வருமான வரித்துறை சந்தேகம் அடைந்து உள்ளது.

முக்கியமாக அவரின் மருத்துவ கல்லூரிகள் மூலமாக அதிக அளவு வருமானம் கணக்கின்றி வந்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றுள்ளதாம். அவருக்கு சொந்தமாக 15+ கல்லூரிகள் உள்ளன. இதில் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன.
இங்கிருந்து முறையின்றி கூடுதல் வருமானம் வந்ததாக வருமான வரித்துறைக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையிலேயே ரெய்டு நடக்கிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை இவருக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அவர் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
நீக்கப்பட்ட வழக்கு: எம்பி ஜெகத்ரட்சகனுக்கு எதிராக ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன. அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினரான திமுக-வை சேர்ந்த எஸ்.ஜெகத்ரட்சகன், கடந்த 1982ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தபோது, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குவிண்டன் டாவ்சன் அளித்த புகாரில் கடந்த 2013ஆம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகாரை முடித்துவைத்தது.
அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு வழக்குகளை பதிவு செய்தது. இதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது போக வேறு சில சொத்து குவிப்பு, வருமான வரி வழக்குகளும் அவர் மீது இருக்கிறது.மேலே குறிப்பிட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்குகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில்தான் புதிதாக ஆதாரங்களை எடுக்கும் விதமாக ரெய்டு நடக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
வீட்டிற்குள் போன அதிகாரிகள்; திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்பான இடங்கள், வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஹோட்டல்களில் ரெய்டு நடந்து வருகிறது. வருமான வரித்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அடையாறில் இருக்கும் அவரின் வீட்டிற்குள் இன்று அதிகாரிகள் சென்றனர். அவர் இருக்கும் போதே ரெய்டு நடந்தது.
அவர் இருக்கும் போதே உள்ளே சென்ற அதிகாரிகள்.. உடனடியாக வெளியே இருந்த ஸ்கிரீனை மூடினார்கள். அதன்பின் அங்கே ஆவணங்களை சோதனை செய்தனர். இன்னொரு அறையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் விசாரணையும் செய்யப்பட்டு வருகிறாராம். அவரிடம் மருத்துவ கல்லூரி வருவாய் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறதாம்.
ரெய்டு நடக்கும் இடங்களில் அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். 40 இடங்களில் நடக்கும் ரெய்டு இனி மேலும் பல இடங்களில் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதிகாலையிலேயே நடக்கும் இந்த ரெய்டு திமுக தரப்பை அதிர வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications