காரணமே வேற.. "அந்த" 3 மணி நேரம்.. மிட்டாய்க்காக குழந்தை அழுமே, அதுமாதிரி.. கொட்டி தீர்த்த துரை வைகோ
மதிமுக மா.செ.க்களின் அதிருப்திக்கு துரை வைகோ காரணம் தெரிவித்துள்ளார்
சென்னை: மதிமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் நிலையில், அதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலைய செலயாளர் துரை வைகோ விளக்கம் தந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே மதிமுகவுக்குள் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது.. அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 4 பேர் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கிவிட்டனர்..
சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் சிவந்தியப்பன் விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மதிமுக மீது குற்றச்சாட்டையும் அள்ளி வீசினர்.

வைகோ
அப்போது "மதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்... இந்த கட்சி திமுகவில் இருந்து பிரியும்போது, திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக சொல்லித்தான் பிரிந்தது. இப்போதும் அதே நிலையில் தன்னுடைய மகனை துணைப் பொதுச் செயலாளராக கட்சியின் கொள்கைக்கு விரோதமாக வைகோ முடிவெடுத்து செயல்படுகிறார்... அதனால், அவரது இந்தக் கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்... அதனால், இனி மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்... மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்" என்றனர்.

துரை விளக்கம்
இந்நிலையில், மதிமுக மாவட்ட செயலாளர்கள் 4 பேர் அதிருப்தியாக செயல்படுவது ஏன் என்பதற்கு துரை வையாபுரி விளக்கம் தந்திருந்தார்.. அவர் சொல்லும்போது, "சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்... தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டிருந்த குழுவில் அவரும் இடம் பெற்றிருந்தார்... அவருக்காக சிவகங்கை தொகுதி கடைசி வரை கேட்கப்பட்டது... ஆனால் கிடைக்கவில்லை.. இந்த விஷயம் அவருக்கே தெரியும்.

அப்செட் - அதிருப்தி
தனக்கு சீட் கிடைக்காத மனவேதனையில் இருந்து வந்தார்.. எத்தனையோ முறை அவரை வைகோ சமாதானப்படுத்த முயன்றார்.. ஆனால் முடியவில்லை.. அதற்காக அவர் சிவகங்கையில் தேர்தலும் பணியாற்றவில்லை.. இப்படி 9 மாதங்களாகவே கட்சி பணியை அவர் செய்யவில்லை... கட்சியின் சார்பில் அழைப்பு விடுத்தும் எந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவும் இல்லை.. இன்னும் சொல்லப்போனால், உள்ளாட்சி தேர்தலில், மதிமுகவுக்கு எதிராகவே பணியாற்றினார்...

மாவட்ட செயலாளர்கள்
இதனாலேயே இவர் மீது அதிருப்தி ஏற்பட்டு, மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் ஏற்கனவே தலைமைக்கு புகார் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் வைகோதான், தாயுள்ளத்தோடு எல்லாம் போக போக சரியாகி விடும் என்றார்.. செவந்தியப்பனை சமாதானப்படுத்த நானே ஒருமுறை நேரில் சென்று பேசினேன்... 3 மணி நேரம் பேசினேன்... மிட்டாய்க்காக சிறுபிள்ளை அழுவதைபோல் திரும்ப திரும்ப தனக்கு போட்டியிட சீட் தரப்படவில்லை என்பதையே சொல்லி கொண்டிருந்தார்..

அழைப்பு
1700 பொதுக்குழு உறுப்பினர்களில் 10 பேரை தவிர எல்லாருமே தலைமை மீதும், கட்சியின் மீதும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறார்கள்.. நடக்க போகும் பொதுக்குழு கூட்டத்துக்கும் அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடைய நடவடிக்கையால் நிர்வாகிகள் கொந்தளித்து போய் உள்ளனர்.. பொதுக் குழுவில் நிச்சயம் இதைபற்றியெல்லாம் பேசுவார்கள்" என்றார்... இந்நிலையில், அதிருப்தி நிர்வாகிகள் இன்று நடக்க போகும் பொதுக்குழுவில் கலந்து கொள்வார்களா? மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications