விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு
சென்னை: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்யிடம் ரூ.404.58 கோடிக்கு அசையும் சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.370 கோடிக்கும் மேல் சேமிப்பையும் வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தவெக முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த முறை விஜய் கட்சியுடன் யாரும் கூட்டணி சேராத சூழலில் மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தவெக கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

விஜய் போட்டி
அதன்படி விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே விஜய் இன்றைய தினம் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தச் சூழலில் தான் அவரது சொத்து விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
சொத்து விவரம்
பெரம்பூரில் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார். விஜய்யிடம் ரூ.404.58 கோடிக்கு அசையும் சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வங்கிக் கணக்குகளில் சேமிப்புகளாக மட்டும் ரூ.370 கோடியை வைத்திருப்பதாக அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடந்து வந்தாலும் இதுவரை முறைப்படி விவாகரத்து வழங்கப்படவில்லை. இதனால் மனைவி என்ற முறையில் அவரது சொத்து விவரங்களையும் விஜய் தாக்கல் செய்துள்ளார். விஜய் மனைவி பெயரில் ரூ.15.51 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன.. விஜய் மனைவி பெயரில் ரூ.2.53 கோடிக்கு அசையா சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் மனைவி பெயரில் கார் கூட இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சேமிப்பு தொகை
சாலிகிராமம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.213.36 கோடியைச் சேமிப்பு கணக்கில் வைத்துள்ளார். இந்திரா நகர் ஆக்சிஸ் வங்கி கிளையில் ரூ.5.79 கோடியை நிலையான வைப்புத் தொகையாக வைத்துள்ளார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கோடம்பாக்கம் கிளையில் ரூ.25 கோடியைச் சேமிப்பு தொகையாக வைத்துள்ளார்.
இந்திரா நகர் ஆக்சிஸ் வங்கி கிளையில் ரூ.49 கோடியை நிலையான வைப்புத் தொகையாக வைத்துள்ளார். ஹெச்டிஎப்சி பெசன்ட் நகர் கிளையில் ரூ.20 கோடி நிலையான வைப்புத் தொகையாக வைத்துள்ளார் சாஸ்திரி நகர் ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.15 கோடியை நிலையான வைப்புத் தொகையாக வைத்துள்ளார்
கல்வித் தகுதி
இந்த வேட்புமனுவில் அவர் தனது படிப்பு விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளைத் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சி பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பட்ட படிப்பைப் பாதியில் நிறுத்தியதாகவும் வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.. அதாவது லயோலா கல்லூரியில் பிஎஸ்சி பட்ட படிப்பை முடிக்காமல் பாதியில் முடிக்கவில்லை என்று அவர் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அவரது வேட்புமனு குறித்த விவரங்கள் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
















Click it and Unblock the Notifications