மேலும் வலுவிழக்கும் தாழ்வு பகுதி.. இன்று தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை ரிப்போர்ட்!
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை குறைந்து வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். படிப்படியாக தமிழ்நாட்டில் மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலிமை இழந்துவிட்டது. இந்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலிமை இழந்து வருகிறது. திரிகோணமலைக்கு அருகே தாழ்வு மண்டலமாக நிலவி வந்தது, நேற்று முதல்நாள் கரையை கடந்தது.
சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் கூட சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்குத்தான் அதிக மழையை கொடுத்தது. பெரிதாக மத்திய மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கவில்லை.

டெல்டா
அதேபோல் டெல்டா மாவட்டங்களுக்கும் பெரிதாக மழையை கொடுக்கவில்லை. டெல்டா மாவட்டங்கள் நவம்பர் முழுக்கவே வறட்சியாக காணப்பட்டது. கிழக்கு காற்று காரணமாகவே மத்திய தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. மாண்டஸ் புயல் சென்ற பின் தமிழ்நாட்டில் மழை குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஒன்றை மாதமாக நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக வறண்டு காணப்பட்டன. இந்த நிலையில்தான் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக மாறி அதன்பின் தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் கடந்த வாரம் முழுக்க இது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகே வந்தது.

வலிமை அடைந்தது
இந்த நிலையில்தான் வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலைக்கு அருகே கரையை கடந்தது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. முக்கியமாக டெல்டா ,மாவட்டங்களில் மழை பிச்சு எடுத்தது. திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, நாகபபட்டினம் மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்தது. பருவம் தவறி மழை பெய்து உள்ளது. இது டெல்டா மாவட்ட விவசாயிகளை கடுமையாக பாதித்து உள்ளது. பயிர்கள் பல நீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன.

மழை
வளைகுடா, இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவிய இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த பின் வலிமை இழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலிமை இழந்துவிட்டது. அதன்பின் நேற்று இரவு இது தாழ்வு பகுதியாக மாறியது. இன்று மேலும் வலிமை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று பெரிதாக மழை இருக்காது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மாலைக்கு பின் மழை
மாலைக்கு பின் மழை பெய்யும். தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications