போனமுறை 'ப்ரோ'னு சொன்னீங்க.. இந்தமுறை ஏதும் இல்லையே! ராகுல்-ஸ்டாலின் கூட்டணி.. அண்ணாமலை சந்தேகம்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கும் விதம் குறித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியிருக்கிறார்.
ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இதில் பெரிதும் கவனிக்கப்பட்டது ராகுல் காந்தியின் வாழ்த்துதான்.

கடந்த ஆண்டு, "எனது சகோதரரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் செழுமையான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாப்பதற்கான எங்களது அர்ப்பணிப்பில் நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுவதில் தொடர்ந்து வெற்றியும் பெற வாழ்த்துகிறேன்" என்று கூறியிருந்தார்.
இந்த ஆண்டு x பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்து குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய நீண்ட கால சேவையாற்ற வாழ்த்துகிறேன்"
என தெரிவித்திருக்கிறார். கடந்த முறை சகோதரர் என்று அழைத்த ராகுல் காந்தி இந்த முறை ஏன் அப்படி கூப்பிடவில்லை? என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். குறிப்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
திமுகவுடன் கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்க வேண்டுமா? என காங்கிரஸ் நிர்வாகிகக்ள பலர் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இருக்கவே இருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். எனவே அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர். மட்டுமல்லாது திமுக அரசின் திட்டங்களை விமர்சிப்பது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கதர் கட்சியில் பெரிய தலைகளே வாயை விட்டிருந்தனர்.
இது திமுக தலைமையை சூடாக்கியிருந்தது. மொத்த கொதிப்பையும் தொகுதி பங்கீட்டில் திமுக காட்டியிருக்கிறது. இந்த முறை கூட்டணிக்கு கூடுதல் கட்சிகள் வந்திருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் போதும் என்று கணக்கு போட்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் இதனை கொஞ்சமும் ஏற்கவில்லை. இப்படி இருக்கையில், இந்த பஞ்சாயத்துகள் காரணமாகத்தான் ராகுல் காந்தியின் ட்வீட்டில் ப்ரோ என்கிற வார்த்தையை காணோம் என்று பலரும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications