"ஸ்டண்ட் மாஸ்டர்" கனல் கண்ணன் எந்நேரமும் கைதாகலாம்.. வீட்டை சுற்றியது போலீஸ்.. 3 ஸ்பாட்டில் தீவிரம்
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் எந்நேரமும் கைதாகலாம் என்கிறார்கள்
சென்னை: கனல் கண்ணன் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்நேரமும் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
சமீபகாலமாகவே, இந்து சமய அறநிலைத்துறையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்... அதேபோல் திராவிடம், பெரியாரின் கருத்துக்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..
தமிழகத்தில் அவ்வப்போது, பெரியார், அம்பேத்கர் சிலைகள் மர்மநபர்களால் உடைக்கப்படுகின்றன.. அந்த சிலைகளின் நிறங்களும் திடீரென மாற்றப்படுகின்றன..
அதிலும் பெரியார் சிலைகள் தொடர்ந்து உடைக்கப்பட்டு வருவது தற்சமயம் அதிகமாகி விட்டது. இதைதவிர, இந்துக்களுக்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணிகளும் செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை பாஜக மற்றும் இந்து முன்னணியினர் தெரிவித்து வருகிறார்கள்..

கனல் கண்ணன்
எனவேதான், இந்து முன்னணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது.. அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.. இந்த கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

கனல் கண்ணன்
"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார். கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. மேலும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது..

புரளி
இந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது, கலகம் செய்யத் தூண்டுதல் , அவதூறு செய்தி மூலம் பொது மக்களிடையே விரோதத்தை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாகவும் தகவல் பரவியது.. எனவே, அவரை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் அவர் கைதாகிவிடுவார் என்றும் செய்திகள் பரபரத்தன..

ஸ்விட்ச் ஆஃப்
இதனிடையே, நேற்றிரவே கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது.. ஆனால், அது புரளி என்று பிறகுதான் தெரியவந்தது.. போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிறார்கள். ஆனால், எந்நேரமும் கைது செய்யப்பட்டு விடுவோம் என்பதால்தான், தலைமறைவாகி உள்ளதுடன், முன்ஜாமீன் பெறும் முயற்சியிலும் கனல் கண்ணன் ஈடுபட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அதற்கேற்றார்போல், அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாம்...

சுற்றிலும் போலீஸ்
தன்னுடைய சென்னை அலுவலகத்துக்கும் கனல் கண்ணன் வரவில்லையாம்.. கனல் கண்ணனை கைது செய்வதற்காக சென்னை மதுரவாயலில் உள்ள அவரது வீடு உள்பட 3 இடங்களில் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.. அதேபோல, அவருக்கு நெருக்கமான இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளிலும் தேடிப்பார்க்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்..கனல் கண்ணன் வீட்டை சுற்றி போலீஸ் உள்ளதால், கைது நடவடிக்கை விரைவில் நடக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications