ஆதிதிராவிட நலத் துறையின் பெயர் மாற்றமா? சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஆதி திராவிட நலத் துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்த குழு, பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் 76 இனங்களை பட்டியல் இனத்தவர்கள் என கண்டறியப்பட்டு, அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத் துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதி திராவிடர் என்பது பட்ட்டியலினங்களில் உள்ள 76 இனங்களில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி மிகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டதாகவும், அந்த குழு ஆய்வு செய்த போது, பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
துறைகளின் மொழிபெயர்ப்பு சரியானதாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் சாதாரண விஷயமல்ல எனவும், பல விவாதங்கள் இதுசம்பந்தமாக நடந்து வருகிறது எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications