உச்சத்தில் கார் திருட்டு! 2ஆம் இடத்தில் திணறும் சென்னை.. அப்போ அதிக திருட்டு எந்த ஊரில் நடக்குது?
சென்னை: நமது நாட்டில் கார் திருட்டு எங்கே அதிகம் நடைபெறுகிறது.. எந்த வகை கார்கள் அதிகம் திருடப்படுகிறது என்பது குறித்த விரிவான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
உலகின் மூன்றாவது மிகப் பெரிய வாகனச் சந்தையாக இந்தியா இருக்கிறது. இதனால் இந்தியாவில் வானக திருட்டும் ரொம்பவே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதற்கிடையே இன்சூரன்ஸ் நிறுவனமான அக்கோ நமது நாட்டில் எங்கே வாகன திருட்டு அதிகம் நடக்கிறது.

கார் திருட்டு எந்த நகரில் மோசமாக இருக்கிறது என்பது குறித்த அறிக்கையை அக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எங்கே அதிகம்: நமது நாட்டில் டெல்லி-என்.சி.ஆரில் தான் கடந்த 2023இல் கார் திருட்டு அதிகமாக நடந்துள்ளது. அங்கே ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருடப்பட்டுள்ளது. எனவே, நமது நாட்டிலேயே கார் உரிமையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி இருக்கிறது. டெல்லியின் ஷாஹ்தரா, பட்பர்கஞ்ச் மற்றும் பதர்பூர் ஆகிய இடங்களில் தான் அதிகளவில் கார் திருட்டு நடந்துள்ளது.
சென்னை: நமது நாட்டின் ஆறு முக்கிய பெருநகரங்களில் கார் திருட்டுகளின் அடிப்படையில் பார்க்கும் போது கொல்கத்தா தான் மிகவும் பாதுகாப்பான நகரமாக இருக்கிறது. கார் திருட்டு அதிகம் நடக்கும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் ஹைதராபாத் நான்காவது இடத்திலும் இருக்கிறது. இதில் மும்பை ஐந்தாவது இடத்தில் இருக்கும் நிலையில், கொல்கத்தா ஆறாவது இடத்தில் உள்ளது.
அதேநேரம் மற்ற பெருநகர நகரங்களுடன் ஒப்பிடுகையில் டெல்லியில் வாகன திருட்டுகளின் பங்கு கடந்த 2022இல் 56% ஆக இருந்த நிலையில், அது 2023இல் 37% ஆக குறைந்துள்ளது. மறுபுறம் கடந்த ஆண்டு சென்னை மற்றும் பெங்களூரில் கார் திருட்டு முறையே 10.5% மற்றும் 10.2% சதவிகிதம் அதிகரித்துள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் கடந்த ஆண்டு சராசரியாக 105 கார் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக அங்கே செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கார் திருட்டு அதிகமாக நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மும்பை போலீஸ்: மும்பையில் 2023ஆம் ஆண்டுகளில் திருடப்பட்ட கார்களில் 4,259ஐ போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதாவது கார் திருட்டு வழக்குகளில் சுமார் 55 சதவிகிதத்தை போலீசார் வெற்றிகரமாகத் தீர்த்துள்ளனர். மும்பையிலிருந்து திருடப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை நேபாளத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கு வாகனங்களைப் பதிவு செய்யும் இன்னும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை என்பதால் திருட்டு வாகனத்தை புதியது போலப் பதிவு செய்து இயக்குகிறார்கள்.

மேலும் மாடல் வாரியாக எந்த கார்கள் அதிகம் திருடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் நாடு முழுவதும் அதிகம் திருடப்பட்ட கார் மாடல்களில் மாருதி சுஸுகியின் வேகன்ஆர் டாப் இடத்தில் உள்ளது. நாட்டில் அதிகம் திருடப்படும் கார்களில் மாருதி சுஸுகியின் கார்கள் தான் 47%ஆக உள்ளது. வேகன்ஆர் தவிர, ஸ்விஃப்ட், ஹூண்டாய் க்ரெட்டா, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவை அதிகம் திருடப்படும் கார் மாடல்களாக உள்ளன.
டூவீலர் திருட்டு: கார்களை போலவே நாட்டில் டூவீலர் திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன. 2023ஆம் ஆண்டு கார்களை விட இந்தியாவில் 9 மடங்கிற்கு மேல் பைக் திருட்டு அதிகம் நடந்துள்ளன. ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவ் மற்றும் ராயல் என்ஃபீல்டு 350 ஆகியவை 2023இல் அதிகம் திருடப்பட்ட பைக்குகளாக உள்ளன. உதிரி பாகங்கள் மற்றும் மறு விற்பனை சந்தையில் அதிகரிக்கும் தேவை என இந்த இரண்டும் தான் பைக் திருட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications