Exit Poll: 2019ல் பாஜக + காங்கிரஸ் வெற்றியை மிக சரியாக கூறியது இந்த 3 கருத்து கணிப்பு தான் தெரியுமா?
சென்னை: 543 லோக்சபா தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக இன்றுடன் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாக உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தான் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பின் முடிவுகளையும், எந்த நிறுவனத்தின் கருத்து கணிப்பு சரியாக அமைந்தது என்பதையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் மத்தியில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக இன்று மாலை 6 மணியுடன் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதேபோல் கடந்த 2019ல் லோக்சபா தேர்தல் முடிவடைந்த பிறகு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. அதில் பிரபலமான கருத்து கணிப்புகள் மற்றும் சரியாக அமைந்த கருத்து கணிப்புகளின் விபரம் வருமாறு:
ஏபிபி - சிவோட்டர்: கடந்த 2019ல் ஏபிபி - சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 277 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 130 தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சி-வோட்டர் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 287 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டு இருந்தது.
இந்தியா டூடே: இந்தியா நியூஸ் -போல்ஸ்ட்ராட் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 287 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணிக்க 128 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்தியா டூடே -ஆக்சிஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 352 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 90 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா டிவி -சிஎன்எக்ஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 300 இடங்களிலும், காங்கிரஸ் 120 இடங்களிலும் வெல்லும் எனவும், நியூஸ் நேஷன் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 286ம், காங்கிரஸ் கூட்டணிக்கு 122ம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நியூஸ் 24 - சாணக்கியா: மேலும் நியூஸ் 24 - சாணக்கியா நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 350 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 95 இடங்களும், நியூஸ் எக்ஸ் -நீட்டா கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 242 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 164 இடங்களும் கிடைக்கும் என சொல்லப்பட்டு இருந்தது. இதுதவிர சுதர்ஷன் நியூஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 313 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்களும், சுவர்ணா நியூஸ்கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 305 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 124 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டைம்ஸ் நவ்: இதுதவிர டைம்ஸ் நவ் -விஎம்ஆர் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 306 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 115 இடங்களும், விடிவி அசோசியேட்ஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 333 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 115 இடங்களுக்கு, அவரேஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 306 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 120 தொகுதிகளிலும், அக்சூவல் ரிசல்ட் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 353 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 93 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சரியாக அமைந்தது எது: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இப்படி அமைந்த நிலையில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி என்றால் 353 இடங்களை கைப்பற்றியது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்றால் மொத்தம் 91 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. அதன்படி பார்த்தால் இந்தியா டூடே -ஆக்சிஸ், நியூஸ் 24- சாணக்கியா மற்றும் ஆக்சூவல் ரிசல்ட் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகள் சரியாக இருந்தன.
ஏனென்றால் இந்தியா டூடே - ஆக்சிஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 352 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 90 இடங்களிலும் வெல்லும் என சரியாக கணிக்கப்பட்டு இருந்தது. அதேபால் யூஸ் 24 - சாணக்கியா நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 350 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 95 இடங்கள் என கணிக்கப்பட்டு இருந்தது. அக்சூவல் ரிசல்ட் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 353 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 93 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த 3 கருத்து கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பு இந்த முறை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications