விஜயிடம் முஸ்லிம்கள் தள்ளியிருக்க வேண்டும்.. ஃபத்வா பிறப்பித்த இஸ்லாமிய மதகுரு யார்? பின்னணி என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்க வேண்டும். அவர் இஸ்லாமியர்களை திரைப்படங்களில் அவமதித்துள்ளார். இதனால் அவரிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று இவர் அகில இந்திய இஸ்லாமிய ஜமாத்தின் தேசிய தலைவராக இருக்கும் சகாபூதின் ரஸ்வி பரேல்வி ஃபத்வா பிறப்பித்துள்ளார். இவர் யார் ? பின்னணி என்ன? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நடிகர் விஜய் தனது கட்சியை பலப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் இஸ்லாமியர்களுக்கு இப்ஃதார் விருந்து வழங்கினார்.

இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இருப்பினும் இஸ்லாமிய மக்களுக்கு துணை நிற்கும் வகையில் இந்த இப்ஃதார் விருந்தை விஜய் வழங்கியதாக தமிழக வெற்றிக் கழகம் கூறியது.
இந்நிலையில் தான உத்தர பிரதேசத்தை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர் நடிகர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக ஃபத்வா பிறப்பித்துள்ளார். ஃபத்வா என்பது இஸ்லாமிய மதகுருக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிறப்பிக்கும் ஒரு உத்தரவாகும்.
இந்த உத்தரவை பிறப்பித்துள்ளவரின் பெயர் சகாபூதின் ரஸ்வி பரேல்வி. இவர் அகில இந்திய இஸ்லாமிய ஜமாத்தின் தேசிய தலைவராக உள்ளார். அவர் பிறப்பித்துள்ள ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து வந்து இஸ்லாமியர்களின் உணர்வுகளை பயன்படுத்தி அரசியலில் வழி தேட நினைக்கிறார். ஆனால் அவரது வரலாறு என்பது இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவே இருந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த ‛தி பீஸ்ட்'திரைப்படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளுடன் தொடர்புப்படுத்தி இருப்பார். அதோடு படத்தில் இஸ்லாமியர்களை அரக்கர்கள், பிசாசுகள் போன்று காட்ட முயன்று இருப்பார். இப்போது அவர் அரசியலுக்கு வந்துள்ளால் இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக நம்மை திருப்திப்படுத்தும் செயலை செய்கிறார்.
மதுபானம் குடிப்பவர்கள் மற்றும் பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள் அவர் இஃப்தார் விருந்துக்கு அழைத்துள்ளார். இவர்கள் இஸ்லாமிய வழிமுறைகளையும், முறையான நோன்பையும் கடைப்பிடிப்பவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள சன்னி இஸ்லாமியர்கள் இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளனர். விஜயிடம் இருந்து இஸ்லாமியர்கள் தள்ளியே இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் பலரும் இந்த உத்தரவை பிறப்பித்த சாகபூதின் ரஸ்வி பரேல்வி யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளார். இவர் உத்தர பிரதேச மாநிலம் பஹரைச் பகுதியை சேர்ந்தவர். 1974 ஏப்ரல் 4ம் தேதி பிறந்தார். இஸ்லாமிய அறிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். கடந்த 10 வருடங்களாக பாஸ்மாண்டா (Pasmanda) பணியில் ஈடுபட்டார். தற்போது அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதுதவிர அகில இந்திய தன்சீம் உல்மா இ இஸ்லாமின் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார். காஷ்மி தரூல்இப்தாவின் தலைவராகவும் உள்ளார். சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவர். இதற்கு முன்பு அகில இந்திய ஜமாத் ரஸா-இ-முஸ்தபாவின் பொதுச் செயலாளராக இருந்தார்.
மேலும் இவர் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை தேர்தல் நேரத்தில் எதிர்த்தார். சமாஜ்வாதி கட்சி இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெறுவதில் தான் குறியாக இருக்கிறது. ஆனால் இஸ்லாமிய தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பது இல்லை என்று விமர்சனம் செய்திருந்தார். அதுமட்டுமின்றி மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இஸ்லாமியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இவர் ஆதரவு தெரிவித்திருந்து இருந்தார். சிஏஏ மூலம் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் தெரிவித்து மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications