சாராயத்திற்காகக் கோயில் சொத்துகளை விற்றவர்கள் யார்? -ராஜீவ்காந்தி மற்றும் மதிவதனி காரசார கேள்விகள்
சென்னை: தமிழ்நாடு அரசு, கோவில்களை அபகரித்துள்ளதாகப் பிரதமர் மோடி சமீபத்தில் பேசி இருந்தார். அதனை மறுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பிரதமர் மோடியின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கிறேன். அவரது பார்வையில்தான் தவறு இருக்கிறது' என்று பேசி இருந்தார்.
மோடியின் பேச்சு எந்த ஆதாரமும் அற்றது. அரசாங்கம் எப்படி கோயிலை அபகரிக்க முடியும் என்கிறார் திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி. இவர் சொல்வதைப்போல் திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5,381.65 கோடி ரூபாய் அளவுக்குத் திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. அதுதான் உண்மை.

அரசு யாரிடம் இருந்து மீட்டுள்ளது? இதுவரை அதை அபகரித்து வைத்திருந்த சமுக விரோத கும்பலிடமிருந்து மீட்டுள்ளது. இத்தனை ஆண்டு ஆட்சியில் ஏன் இந்தச் சொத்துகள் மீட்கப்படவில்லை? அதை அபகரித்து வைத்திருந்த தனி நபர்கள் யார்? எனப் பல கேள்விகள் எழுகின்றன.
5,381.65 கோடி சொத்து என்பது சும்மா இல்லை. 404 கோடி நிதியை வைத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்குக் காலை உணவு வழங்க முடிகிறது. ரூ.7,000 கோடி நிதியை வைத்து 1 கோடியே 65 லட்சம் பயனாளிகளுக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்க முடிகிறது.

அப்படி என்றால், 5,381.65 கோடி கோயில் சொத்துகள் என்பது எளிமையான விசயம் இல்லை.
பிரதமர் மோடி சொல்வது சரியா? கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது எதனால்? ஏன் அந்த நிலை உருவானது? என்பது பற்றி சில வரலாற்று உண்மைகளை விளக்க இருவரிடம் கேட்டோம்.

கோயில் உரிமை, சமூகநீதி எனப் பல ஆண்டுகளாக இந்த மாற்றத்திற்காகப் போராடி வரும் இயக்கம் திராவிடர் கழகம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மதிவதனி, "அரசு கோயில்களை ஆக்கிரமித்துள்ளது என்பது மோடியின் வாதம். இது முதல் பொய். பிரதமர் மோடி பேசியது பொய். எப்படி அது பொய் என்பதை நான் விளக்குகிறேன். இந்து சமய அறநிலையத் துறை சட்டம், பிரிவு 10 என்ன சொல்கிறது?
கமிஷ்னர் தொடங்கி டெபுடி கமிஷ்னர், ஜாய்ன்ட் கமிஷ்னர், அறங்காவலர் எனப் பல படிநிலைகளைக் கடந்து கோயில்களில் கூட்டிப் பெருக்கக் கூடிய கடைநிலை ஊழியர்கள் வரை யார் இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்களோ, யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள்தான் கோயிலில் பணிசெய்ய முடியும் என்று சட்டம் சொல்கிறது.

நான் பிறப்பால் இந்து எனச் சட்டம் சொல்கிறது. ஆனால், நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால் கோயிலில் பணிசெய்ய முடியாது.
மேலும், குறிப்பாக அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். அப்படி யாருக்காவது இந்துமதத்தின் மீதான நம்பிக்கைப் போய்விட்டது எனச் சொன்னால், அந்த நொடியிலிருந்து கோயில்களில் எந்தப் பதவியையும் பொறுப்பையும் அனுபவிக்க முடியாது என்று சொல்கிறது.

இந்தச் சட்டவிதியின்படி பார்த்தால், கோயிலைக் கூட்டிப் பொறுக்குகின்றவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். கமிஷ்னர் இந்து, ஜாய்ண்ட் கமிஷ்னர் இந்து, அசிஸ்டெண்ட் கமிஷ்னர் இந்து, அறங்காவலர் இந்து, இவர்களுக்கு எல்லாம் மேலே உள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இந்து, இப்படி அனைவருமே இந்துக்கள்தான்.
இப்படி கோயிலை நிர்வகிக்கும் அனைவரும் இந்துவாக இருக்கும்போது, கோயில்களை இந்துக்கள் கையில் கொடுங்கள் என்கிறார்களே? அப்படி என்றால் இப்போது உள்ளவர்கள் யாரும் இந்துக்கள் இல்லையா? அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? பிராமணர்கள் கையில் கோயில்களைக் கொடுக்கச் சொல்கிறார்களா? இப்படித்தான் மோடி சொல்கிறார்.

பரம்பரைப் பரம்பரையாக நிர்வகித்து வந்தவர் கைகளில் தரச் சொல்கிறார்கள். அது யாருடைய பரம்பரை?
1962இல் போடப்பட்டது சி.பி.ராமசாமி ஐயர் கமிஷன். அதில் அவர் மூன்று விசயங்களைச் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியமாகக் கோயில்களை நிர்வகித்து வந்த அறங்காவலர்கள், பூசாரிகள், மடாதிபதிகள் எனப் பலரால் இந்தக் கோயில் நிர்வாகம் சீரழிந்து கிடந்தது என்கிறார்.

'ஒரு சாராய பாட்டில் வாங்குவதற்காக எல்லாம் கோயில் சொத்துக்களை விற்றுள்ளார்கள்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கோயில் சொத்துகளின் கணக்கு முறையாகப் பேணப்படவில்லை என்கிறார்.
பூவிருந்தமல்லியில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்தை ஆக்கிரமித்திருந்தார்கள். அதை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021 இல் மீட்டு இருக்கிறது. அரசாங்கம் என்பது massive body.

இவ்வளவு வலிமை மிக்க அமைப்பால் கோயில் சொத்துகளை நிர்வகிக்க முடியவில்லை என்று சொன்னால், வேறு யாரால் நிர்வகிக்க முடியும்? வேறு யாரிடம் கோயில் நிர்வாகத்தைக் கொடுக்கச் சொல்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார் மதிவதனி.
அடுத்ததாகப் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி, "சிதம்பரம் கோயிலை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஏன் அதைச் சொல்கிறேன் என்றால், மற்ற பெரிய கோயில்கள் அனைத்தும் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் தங்களின் கையில் வைத்திருக்கிறார்கள். அதை நான் ஆக்கிரமிப்பாகத்தான் பார்க்கிறேன்.

சிதம்பரம் கோயிலைக் கட்டியவர்கள் யார்? தீட்சிதர்களா? அன்று இருந்த அரசர் கட்டினார். அதற்குக் கல் சுமந்தவர்கள் யார்? தீட்சிதர்களா? அந்தக் கோயிலுக்கு பெயிண்ட் அடித்தவர்கள் யார்? தீட்சிதர்களா? அந்தக் கோயில் சிலைகளை வடிவமைத்தது யார்? தீட்சிதர்களா? இதில் ஒன்றையும் அவர்கள் செய்யவில்லை.
ஆனால், கட்டி முடித்த பிறகு அந்தக் கோயில் எங்களுக்குச் சொந்தம் என்கிறார்கள்.
மெட்ராஸ் பிரசிடென்சியாக இந்த மாநிலம் இருந்தபோது சட்டமன்றத்தில் ராஜாஜி என்ன பேசினார் தெரியுமா? 'ஈ.வே.ராமசாமி வீதி வீதியாகப் போய் கத்திக் கொண்டிருக்கிறார். எங்கே சென்றாலும் எனக்குப் பிரச்சினையாக இருக்கிறது. கடவுளையே கும்பிடாத சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், கோயிலுக்கு உள்ளே போவோம் என்று சொல்கிறார்கள். இந்துவாகிய நான் சொல்கிறேன், இனிமேல் எல்லா சாதியினரும் கோயிலுக்குள் போகலாம் என்று பேசி இருக்கிறார்.

இன்றைக்குத் திமுக வந்த பிறகுதான் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம்.
அதற்கு முன்னால் யார் செய்தார்கள்? பிராமண சமூகத்தைத் தவிர வேறு யாராவது கோயிலில் அர்ச்சகராக இருந்திருக்கிறார்களா? அப்படி என்றால், ஏன் இல்லை? அவர்களுக்கு ஏன் உரிமை வழங்கப்படவில்லை?
இதுவரை கோயிலை ஆக்கிரமித்து பிராமணர் அல்லாத சமூகத்தை உள்ளே விடாமல் தடுத்து வைத்தது யார்? ஏன் தடுத்தார்கள்? அரசு கோயிலை ஆக்கிரமித்திருக்கிறது என்கிறார்களே? மேல் மருவத்தூர் கோயில் யார் கையில் இருக்கிறது? அது அரசு கையில் இருக்கிறதா? அது இந்துக் கோயிலா? அல்லது இஸ்லாமியக் கோயிலா?

ஏறத்தாழ தமிழ்நாட்டில் 2 லட்சம் தனியார் கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லை. தனியார் கையில்தான் இருக்கின்றன. 1959 அறநிலையத் துறை சட்டம் பிரிவு 10 தெளிவாகக் கூறி உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையை நிர்வகிக்கின்ற அரசு ஊழியராக இருந்தாலும் அவர் கட்டாயம் இந்துவாக இருக்கவேண்டும் என்கிறது. அப்படி வருபவர் பிராமணராக மட்டும் இருக்கவேண்டும் என்பது இல்லை என்ற ஒரு பொதுவிதி அதில் உள்ளது. ஆகவே சிலருக்கு கோபம் வருகிறது.
பள்ளிக்கல்வித்துறையை அரசு ஆட்டையைப் போட்டு உள்ளது என்று சொல்வார்களா? பொதுப்பணித்துறையை அரசு ஆட்டையைப் போட்டு வந்துள்ளது என்று சொல்வார்களா? இங்கே அரசாங்கம் என்று ஒன்று உள்ளது. இது ஏதோ பரலோகத்துப் பதவி இல்லை. சிவலோக பதவி இல்லை.

எந்த மசூதிக்குள்ளாகவும் நீ ராவுத்தரா? லெப்பையா? எனக் கேட்டு உள்ளே அனுமதிப்பது இல்லை. கிறிஸ்துவ மதத்திலும் அப்படித்தான். யாரும் உள்ளே போய் வழிபடலாம்.
ஆனால், இங்கே கோயில்களில் இவர்களை வரக்கூடாது என்று சொல்லி போர்டு வைத்தார்கள். இந்த மொழியில் வழிபாடு இல்லை என்று போர்டு வைத்தார்கள். தீண்டாமை அங்கே கடைப்பிடிக்கப்பட்டது. பெரும்பகுதி மக்கள் உள்ளே வரக்கூடாது என்று தடுக்கப்பட்டனர்.

ஆகவேதான் இந்து சமய அறநிலையத் துறை என்று தேவைப்பட்டது. அதை நெறிப்படுத்த அரசாங்கம் தேவைப்பட்டது" என்று ஆவேசமாகச் சொல்கிறார்.
கோயில் கூடாது என்று சொல்லவில்ல.. கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்றுதான் சொல்கிறோம்.''

நமக்கு 'பராசக்தி' படத்தில் வரும் பழைய வசனம்தான் ஞாபகம் வருகிறது!












Click it and Unblock the Notifications