பாஜக ஐடி விங் அடுத்த தலைவர் இவர் தானா? அண்ணாமலையின் பிளானால் ஷாக் ஆன சீனியர்கள்.. ஆஹா.. முடிஞ்சுதா!?
பாஜக ஐடி பிரிவின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு பாஜகவில் எழுந்துள்ளது.
சென்னை : பாஜக ஐடி விங் தலைவர், செயலாளர் என பலர் கட்சியை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், அந்தப் பதவிகளைப் பெறுவதற்கு பாஜகவில் பெரும் போட்டியே நடக்கிறதாம். இதில் அண்ணாமலை, தனக்கு நெருக்கமான இளைஞர் ஒருவருக்கு அந்தப் பதவியை பெற்றுத்தர காய்நகர்த்தி வருகிறாராம்.
பாஜக ஐடி விங் மாநிலத் தலைவர், செயலாளர், ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து வெளியேறினாலும் அசராமல் பேசி வருகிறார் அண்ணாமலை.
போகிறவர்கள் போகட்டும், இந்தப் பதவிகளுக்கு தனக்கு நம்பிக்கையான ஆளை நியமித்துக் கொள்ளலாம் என்பதுதான் அண்ணாமலையின் கணக்காக இருக்கிறதாம்.

பாஜக ஐடி விங் காலி
தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக வலைதள அணியின் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், அண்ணாமலையை பெயர் குறிப்பிடாமல் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பாஜகவில் இருந்து வெளியேறி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஐடி விங் நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி வருகின்றனர்.

அடுத்த தலைவர்
இந்நிலையில், பாஜக ஐடி விங் மாநில தலைவர் பதவிக்கு அடுத்ததாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் அண்ணாமலையின் லெட்டர் பேட் போல போலியான ஒரு அறிக்கை பரவியது. அதில் பாஜக ஐடி விங் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மற்றும் பாஜக ஐடி விங் மாநில செயலாளராக பிரதீப் (வாயிஸ் ஆஃப் சவுக்கு சங்கர்) ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, போலியாக உருவாக்கப்பட்டு பரவிய இதனை பலர் உண்மை என்றே பகிர்ந்திருந்தனர்.

பலத்த போட்டி
இந்நிலையில், அடுத்த பாஜக ஐடி விங் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வது பற்றி மாநில தலைமை ஆலோசித்து வருகிறதாம். தமிழ்நாடு பாஜகவின் ஐடி விங் மாநிலத் தலைவர் பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும், இந்தப் பதவியைப் பெற்றால் மிக விரைவாகவே அனைவரின் கவனத்தையும் பெற முடியும் என்பதாலும் இந்தப் பதவியைப் பெறுவதற்கு பாஜகவில் பலரும் முட்டி மோதி வருகின்றனராம்.

சீனியர்கள் அப்செட்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனக்கு நெருக்கமான ஒரு இளைஞருக்கு இந்த பதவியைப் பெற்றுத் தர முயன்று வருகிறாராம். அந்த நபர் ஏற்கனவே மோசடி வழக்கில் கைதானவர் என்று கூறப்படுகிறது. இதனால், அண்ணாமலையின் முடிவுக்கு இப்போதே கட்சிக்குள் அதிருப்திக் குரல்கள் எழுந்து வருகின்றனவாம். ஏற்கனவே, மோசடி பேர்வழிகளின் கட்சி என்று பாஜக மீது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இப்படியான சூழலில் அவரை கொண்டு வந்து நிறுத்துவது கட்சிக்கு விமர்சனத்தைத்தான் தேடித் தரும் என்கிறார்களாம் சீனியர்கள்.

மூத்த நிர்வாகிகள் கலக்கம்
மேலும், அண்ணாமலை ஏற்கனவே கட்சியில் பதவிகள் பெற்றுத்தந்து வளர வைத்த பலர் பெரிய சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். கட்சியில் இருப்பவர்கள் மீதே பகிரங்கமாக குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றனர், சீனியர்களை குறி வைத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர், அப்படி இருக்கும்போது, அண்ணாமலைக்குத் தோதான ஆளை மீண்டும் ஐடி விங் பொறுப்பில் அமர்த்துவது தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பல மூத்த பாஜக நிர்வாகிகள் கருதுகின்றனராம்.

ஃப்ரீ ஹேண்ட்?
இதனால், பாஜக தலைமை யாரை ஐடி விங் தலைவராக நியமிப்பதற்கு ஓகே சொல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் தலைவன், டெல்லிக்கு நான் பயப்பட மாட்டேன், நான் தான் முடிவுகளை எடுப்பேன் எனப் பேசி வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் சொல்வது போல, பாஜக ஐடி விங் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனத்தில் அண்ணாமலைக்கு ‘ஃப்ரீ ஹேண்ட்' வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications