கண்ட்ரோலே இல்லையே.. மாறி மாறி பேசும் அதிமுக தலைகள்.. அப்போ எடப்பாடி? பாஜகவும் குழம்பிடுச்சே!
சென்னை: பாஜக கூட்டணி தொடர்பாக அதிமுக தலைவர்கள் மாறி மாறி பேசி வருவது அதிமுக தொண்டர்கள் தொடங்கி பாஜக தலைவர்கள் வரை பலரையும் குழப்பி உள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் அவர் எடுப்பதே முடிவாக இருந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் பெரும்பாலும்.. "அம்மா" முடிவு எடுப்பார்.. என்று கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பில் பதில் சொல்லாமல் சென்றுவிடுவார்கள். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி காலத்தில் அதிமுக தலைவர்கள் மாறி மாறி வேறு வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் பாஜக உடன் கூட்டணி என்ற முக்கிய விஷயம் குறித்து கூட அதிமுக தலைவர்கள் மாறி மாறி பேசி வருவது விவாதங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்தனர். இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திடீர் திருப்பம்: இந்த நிலையில் திடீர் திருப்பமாக கூட்டணி குறித்தோ, பாஜக குறித்தோ பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
கூட்டணி நிலைப்பாட்டை தலைமை ஏற்கெனவே கூறிவிட்ட நிலையில் வேறு யாரும் பேசக்கூடாது; கூட்டணி மற்றும் பாஜக பற்றி பேசினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாஜி அமைச்சர் ஒருவர் கூட்டணி குறித்து, பாஜக குறித்தும், மோடி குறித்தும் பேசினார். மோடியை, பாஜகவை புகழ்ந்து பேசியதோடு, கூட்டணி குறித்து பாசிட்டிவ் கருத்து ஒன்றையும் கூறியதாக செய்திகள் வந்தன.
இதையடுத்து மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், பாஜக உடனான கூட்டணியில் எங்களுக்கு குழப்பம் இல்லை. பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். அதற்கான பணிகளை செய்ய நாங்கள் தயார், அதேபோல் எடப்பாடியை முதல்வராக பாஜக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் =, என்று செல்லூர் ராஜு கூறினார்.
அண்ணாமலை பேச்சு: இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணி குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் மழுப்பலாக பேசினார். அவர் பேச்சில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது! கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான்.
இபிஎஸ்ஸை அடுத்த முதல்வராக்குவோம் என நான் கூற முடியாது. நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக தேசிய பாஜக தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பது தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
ஜெயக்குமார்: இந்த நிலையில் தற்போது ஜெயக்குமார் அளித்த பேட்டியில் மீண்டும், பாஜகவுடன் கூட்டணி இல்லை. எங்கள் கூட்டணி முறிந்துவிட்டது என்பதை அப்போதே அறிவித்துட்டோம், என்று மீண்டும் கூட்டணிக்கு எதிராக பேசி உள்ளார். செல்லூர் ராஜு ஒன்று பேச.. ஜெயக்குமார் வேறு ஒன்று பேச ஒரே குழப்பமாக மாறி உள்ளது.
என்ன குழப்பம்: அதன்படி எடப்பாடி பழனிசாமியை கூட்டணி மீட்டிங்கிற்கு பாஜக அழைக்கிறது. டெல்லியில் பிரதமர் மோடிக்கு அருகில் கூட இடம் கொடுக்கிறது. அமித் ஷா மீண்டும் அழைத்து ஆலோசனை செய்கிறார். ஆனால் இங்கே அண்ணாமலை அதிமுக தலைவர்களுடன் மோதலில் ஈடுபடுகிறார்.
இதனால் அண்ணாமலையை பின்பற்றி அதிமுகவை விமர்சனம் செய்வதா? அல்லது மோடி, அமித் ஷாவை பின்பற்றி அதிமுகவுடன் நட்பாக செல்வதா என்று தெரியாமல் பாஜகவினர் குழம்பிப்போய் இருக்கிறார்களாம். தமிழ்நாட்டில் பாஜகவால் அதிமுக இல்லாமல் போட்டியிட முடியாது. அப்படி இருக்க அதிமுகவை எதிர்ப்பது சரியா? அல்லது அண்ணாமலை பாணியில் பாஜகவை தனியாக வளர்த்து எடுப்பதா? என்ற குழப்பத்தில் பாஜக தமிழ்நாட்டு தலைவர்கள் இருக்கிறார்களாம்.
அதிமுகவினர் குழப்பம்: இன்னொரு பக்கம் அதிமுகவினரும் குழம்பிப் போய் இருக்கிறார்களாம். ஒருநாள் ஜெயக்குமார் தோன்றி.. கூட்டணி இல்லை. இது கட்சியின் நிலைப்பாடு என்கிறார். மறுநாளே செல்லூர் ராஜு மோடிதான் பிரதமர் ஆக வேண்டும். பாஜகவுடன் நாங்கள் சுமுகமாகவே இருக்கிறோம் என்று இருக்கிறார்.
இப்போ கூட்டணி இருக்கா.. இல்லையா? பாஜகவுடன் நட்பாக செல்ல வேண்டுமா? கூடாதா என்று தெரியாமல் அதிமுக தொண்டர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இரண்டு கட்சியிலும் தொண்டர்கள் இதனால் கடுமையான குழப்பத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications