அவிழும் மர்ம முடிச்சு.. விஜய் ஏசுதாஸ் வீட்டு கொள்ளை.. ஐஸ்வர்யா ரஜினி வீட்டு டிரைவர் மீது சந்தேகம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் திருட்டு போன வழக்கில் கைதான கார் டிரைவர் வெங்கடேசன், முதலில் பாடகர் விஜய்ஜேசுதாஸ் வீட்டில்தான் வேலை செய்ததாகவும், இதனால் பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டின் லாக்கரில் இருந்த ரூ.60 லட்சம் தங்கம்-வைர நகைகள் கொள்ளை போன வழக்கில் டிரைவர் வெங்கடேசன் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் மகன் விஜய் ஜேசுதாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார். சில படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் தனுசுடன் மாரி படத்தில் நடித்துள்ள விஜய் ஜேசுதாஸ் சென்னை அபிராமபுரம், 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் விஜய் ஜேசுதாஸின் மனைவி தர்ஷனா, சென்னை அபிராமபுரம் காவல் நிலையில் நகைகள் காணாமல் போனதாக கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன புகார்
விஜய் ஜேசுதாஸ் மனைவி தனது புகாரில், 'வீட்டில் உள்ள நம்பர் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகள் காணாமல் போயிருக்கிறது, கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரியிருந்தார். இது தொடர்பாக அபிராமபுரம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்தார்கள்.

விசாரணை
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் இந்த நகை கொள்ளை வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகைகள் மாயம்
விஜய் ஜேசுதாஸ் வீட்டு நகை கொள்ளை வழக்கில் குற்றவாளி யார் என்பதை இன்னும் போலீசாரால் உறுதிபடுத்த முடியவில்லை. பல்வேறு சந்தேக கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி லாக்கரில் நகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் லாக்கரை திறந்து பார்த்தபோது, நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது.

சந்தேகம் இல்லை
ஆனால் அப்போது புகார் கொடுக்காமல், ஒரு மாதம் கழித்து புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாடகர் விஜய் ஜேசுதாஸ் துபாய் சென்றுள்ளார். அவர் இல்லாத நேரத்தில் அவரது மனைவி இந்த புகாரை கொடுத்திருக்கிறார். அவர் புகாரில் முரணான தகவல்களை சொல்கிறார். வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக முதலில் அவர் கூறவில்லை.

வெங்கடேசன்
ஆனால் தற்போது வேலைக்காரர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். நகைகள் மாயமான பிப்ரவரி மாதத்தில் வேலைக்கார பெண் ஒருவர் திடீரென்று வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் திருட்டு போன வழக்கில் கைதான கார் டிரைவர் வெங்கடேசன், முதலில் பாடகர் விஜய்ஜேசுதாஸ் வீட்டில்தான் வேலை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகுதான் ஐஸ்வர்யா வீட்டுக்கு கார் ஓட்ட வந்தாராம்.

லாக்கர்களில் திருட்டு
இருப்பினும் அவர் விஜய் ஜேசுதாஸ் வீட்டுக்கும் அடிக்கடி வந்து போய் இருக்கிறார். இதனால் அவர் மீதும் சந்தேகம் உள்ளது. வேலையில் இருந்து நின்ற வேலைக்கார பெண்ணிடமும் விசாரணை நடத்த போகிறோம்" என்று அந்த காவல் துறை அதிகாரி கூறினார். ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டும், விஜய் ஜேசுதாஸ் வீட்டில் நடந்த திருட்டும் லாக்கரில் இருந்துதான் நடந்திருக்கிறது.

விஜய் ஏசுதாஸ் பாஸ்வேர்டு
ஆனால் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் சாவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விஜய் ஜேசுதாஸ் வீட்டில் லாக்கரின் 'பாஸ்வேர்டு நம்பர்' பயன்படுத்தப்பட்டு உள்ளது. அந்த 'பாஸ்வேர்டு நம்பர்' விஜய் ஜேசுதாசுக்கும், அவரது மனைவிக்கும் மட்டும்தான் தெரியும் என்று கூறப்படுகிறது. வேலைக்காரர்கள் இதை தெரிந்து கைவரிசை காட்டினார்களா அல்லது வேறு யாராவது தெரிந்து இந்த திருட்டில் ஈடுபட்டார்களா என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடக்கிறது.

மர்ம முடிச்சு
விஜய் ஜேசுதாஸ் துபாயில் இருந்து சென்னை வந்த பிறகு அவரையும், அவரது மனைவியையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அப்போது தான் இந்த திருட்டில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, குற்றவாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறோம் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications