எடப்பாடி அப்படி சொல்லியும் கூட.. திரியை பற்ற வைத்த "அண்ணாமலை".. ஆஹா அனல் அடிக்குதே.. போச்சா?
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து ஒன்று கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசிய அண்ணாமலை, பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.
அண்ணாமலையின் இந்த கருத்து கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்தது.
அமித் ஷா பேச்சு:

இந்த நிலையில்தான் அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக பாஜக தலைவர் அமித் ஷா பேசி இருந்தார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.
அண்ணாமலை vs எடப்பாடி;

அமித் கருத்தை கொஞ்சம் மறுதலிக்கும் விதமாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் எங்கேயும் கூறவில்லை. அமித்ஷா கூறியதை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக என்பதற்கு ‛இருக்கிறது' என்று தான் அமித்ஷா கூறினார். நான் அமித் ஷாவுடன் இரண்டு மணி நேரம் பேசினேன். அதில் பல விஷயங்களை பேசினோம். அதை எல்லாம் இங்கே சொல்ல முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. இதுதான் நடக்கும் என்று எதையும் உறுதியாக சொல்ல முடியாது. கூட்டணி விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்பதை கூற இயலாது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை. அரசியலில் தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பாஜகவின் கூட்டணியை மாநிலத்தில் உள்ளவர்கள் உறுதி செய்ய மாட்டார்கள். பாஜகவில் பொதுவாக இதை மத்தியில் இருப்பவர்கள்தான் உறுதி செய்வார்கள். மாநிலத்தில் இருப்பவர்கள் இதில் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள் என்று கூறினார்.
அண்ணாமலை பதிலடி:

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொண்டோம். காரணம் அது தமிழ்நாட்டில் நடந்த தேர்தல். ஆனால் 2024ல் நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல். நாடு முழுக்க நடக்கும் தேர்தல் இது. இதில் பாஜக தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமையும். ஏனென்றால் பாஜக என்பது தேசிய கட்சி.
நாங்கள் மாநில கட்சி கிடையாது. தமிழ்நாட்டில் இருப்பவை எல்லாம் பிராந்திய கட்சிகள். அதனால் பாஜக தலைமையிலேயே கூட்டணி அமையும். மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல், விட்டுக்கொடுத்து எல்லோரும் பேசி கூட்டணியை அமைப்போம். கூட்டணியை பொறுத்தவரை இதில் டெல்லி முடிவு எடுக்கும் , என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி என்று கூறி வரும் நிலையில், பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று அண்ணாமலை கூறி இருப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாஜகதான் தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்பது போல அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார். இதற்காக அதிமுக என்ன மாதிரியான பதிலடியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அண்ணாமலையின் இந்த பேச்சு காரணமாக அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி விவகாரத்தில் இப்போதே அனல் அடிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications