சென்னை பெண் தொழில் அதிபரின் ரூ.1,000 கோடி சொத்து.. அமலாக்கத்துறை முடக்கியது ஏன்?
சென்னை: சென்னை தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலை பகுதியை சேர்ந்த ஆண்டாள் ஆறுமுகம் என்பவர் மறைந்த பிரபல தொழில அதிபரின் மகள் ஆவார். இவரதுவீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் ரூ.912 கோடி வங்கி வைப்புத்தொகை, ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் அடிக்கடி நாடு முழுவதும் சோதனை நடத்துவார்கள். சோதனையின் போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் இருப்பது தெரியவந்தால், கைது செய்து சொத்துக்களை முடக்கி வைப்பார்கள். அதன்பின்னர் அமலாக்கத்துறை அவர்கள் சேர்ந்த சொத்துக்கள் குறித்து விசாரணையை தீவிரமாக நடத்துவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் முறையிட்டு தண்டனைக்குள்ளாக்குவார்கள். இது பொதுவான நடைமுறையாகும்.

சென்னை தேனாம்பேட்டை அபிராமபுரம் சேமியர்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள் ஆறுமுகம். பெண் தொழிலதிபரான இவர், மறைந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். இவர்களுக்கு சொந்தமாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆண்டாள் ஆறுமுகத்தின் தந்தை போரூரில் மிகப்பெரிய மருத்துவ பல்கலையை உருவாக்கியுள்ளார். இதனிடையே ஆண்டாள் ஆறுமுகம் நடத்தும் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக டெல்லி சிபிஐ ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் முறைகேடான பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த மாதம் (ஜனவரி) 31-ந்தேதி ஆண்டாள் ஆறுமுகத்தின் வீடு உள்பட 3 இடங்களில் 6 பேர் அடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அண்மையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வந்தார்கள். இந்த ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அதில், " சென்னை பெண் தொழில் அதிபர் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் என சுமார் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ரூ.912 கோடி மதிப்பிலான நிலையான வைப்பு ரசீதுகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளும் முடக்கப்பட்டிருக்கிறது" இவ்வாறு அமலாக்கத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications