பேசுனது எல்லாம் வேஸ்ட்டா? 5 பேரை அப்படியே ஓரம்கட்டிய எடப்பாடி.. "கொங்கு" மாஜிக்கே கல்தா! பரிதாபம்!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்த முக்கியமான நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை கழகத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
Recommended Video
நேற்று இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பல புதிய நியமனங்களை மேற்கொண்டார். அதிமுக துணைப்பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவருக்கும் பதவி கொடுக்கப்படலாம் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய அறிவிப்பில் பல சர்ப்ரைஸ் விஷயங்கள் இடம்பெற்று இருந்தன.

வேலுமணி
அதிமுக சார்பாக எதிர்க்கட்சி துணை தலைவராக வேலுமணி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் வகிக்கும் அந்த பதவி, அவரின் நீக்கத்தால் வேலுமணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவின் தலைமை கழக செயலாளராக வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமி வகித்த பதவி ஆகும். கட்சியில் முக்கியமான பதவி ஆகும்.

பொன்னையன்
அதேபோல் ஆடியோ லீக்கான விவகாரம் காரணமாக பொன்னையன் ஓரம்கட்டப்பட்டு உள்ளார். அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளார். அவர் எம்ஜிஆர் மன்ற செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அவ்வளவு பவர் இல்லாத பொறுப்பு ஆகும். ஆனால் இதெல்லாம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பதவி மாற்றங்கள் ஆகும். நேற்றைய அறிவிப்பில் எதிர்பார்க்காத சில விஷயங்களும் இடம்பெற்று இருந்தன.

ஜெயக்குமார்
எடப்பாடிக்கு நெருக்கமாக இருக்கும் தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செம்மலை, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. ஜெயக்குமார் மீண்டும் ஒரு முறை ஓரங்கட்டப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி, அவைத்தலைவர் பதவி, பொருளாளர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது 3ம் வழங்கப்படாத நிலையில் நேற்று வந்த அறிவிப்பில் அவருக்கு எந்த பதவியும் அளிக்கப்படவில்லை.

கொங்கு
கொங்கில் வலிமையாக இருக்கும் தங்கமணி எடப்பாடி பழனிசாமிக்கு மிக மிக நெருக்கமானவர் ஆவார். ஆனால் அவருக்கும் தலைமை கழகத்தில் இடம்பெறவில்லை. எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல்நாள் பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் தங்கமணி திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக பொன்னையன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

தங்கமணி
தங்கமணி இப்போது மு. க ஸ்டாலின் பின்னாடி செல்ல ஆரம்பித்து இருக்கிறார். தங்கமணி தன்னை காப்பாற்றிக்கொள்ள ஸ்டாலின் பக்கம் செல்ல தொடங்கிவிட்டார். கேபி முனுசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திக்கொண்டார், என்று பொன்னையன் பேசுவதாக கூறப்படும் ஆடியோவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது தங்கமணிக்கு கட்சியில் பதவி எதுவும் கொடுக்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டு இருக்கிறார்.

என்ன செய்வார்?
எடப்பாடிக்கு ஆதரவாக பல இடங்களில் பேசியும் கூட இந்த 5 புள்ளிகளை இப்படி எடப்பாடி ஓரம்கட்டியது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில்.. இது முதல் கட்ட நியமனமாக இருக்கலாம். இன்னும் பொறுப்புகளை விரிவுபடுத்த முடியும். கூடுதலாக எத்தனை துணை பொதுச்செயலாளர்களை வேண்டுமானாலும் எடப்பாடி நியமிக்க முடியும். அதை பயன்படுத்தி அவர் விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். அதேபோல் கொறடா, துணை எதிர்க்கட்சி தலைவர் பதவிகள் சிலருக்கு வழங்கப்படலாம் என்றும் எடப்பாடி ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications