"முஸ்லிம்" என்றால் இப்படியா.. கொந்தளித்த தமிமுன் அன்சாரி.. சப்போர்ட்டுக்கு வந்த கருணாஸ்.. என்னவாம்?
10 வருடங்களுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுவிக்க கருணாஸ் கோரியுள்ளார்
சென்னை: 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்திற்கு முக்குலத்தோர் புலிப்படை முழு ஆதரவு அளிப்பதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறை வாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல் அரசாணையை தமிழக அரசு கடந்த வருடம் வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, 10 ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பலமுறை வலியுறுத்தி உள்ளார். அதேபோல, 10 ஆண்டுகளைக் கடந்து சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை சாதி, மத பேதமின்றி, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது..

தமிமுன் அன்சாரி
ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையை மையப்படுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி எதிர்வரும் செப்டம்பர் 10 ம் தேதி "தலைமைச் செயலகம் முற்றுகை" போராட்டம் நடக்கும் என்றும், ஜனநாயக சக்திகள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.. இந்நிலையில், தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கிற தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு தெரிவித்துள்ளது..

கருணாஸ்
இதுதொடர்பாக அக்கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: "சாதி மத வழக்கு பேதமின்றி பொதுமன்னிப்பின் கீழ் 10 ஆண்டுகளை கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வலியுறுத்தி தூய அரசியலை முன்னெடுத்துச் செல்லும் தோழர் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கிற தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கு முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாற்றாந்தாய்
இந்நாட்டில் இறையாண்மை என்ற பூதத்தை காட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பலரை சிறையில் வைத்திருப்பது மனிதாபிமானமற்ற ஈவு இரக்கமற்ற செயல். பல்வேறு தரப்பினரை காலம் கடந்து சிறையில் வைத்திருப்பதும் குறிப்பாக இஸ்லாமிய தோழர்களை சிறைப்படுத்துவதில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பாரபட்சம் காட்டி வருவதும் தொடர்ந்து நடந்தேறுகிறது, இது இஸ்லாமிய சமுதாயத்திற்கு காட்டும் வன்மம்.

சிறைவாசிகள்
நீண்டகால சிறைவாசம் என்பது சிறைவாசிகளின் மனநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது, சிறை வாசம் அவர்களுக்கு பல படிப்பினைகளையும் தந்திருக்கிறது, இவற்றை கடந்த காலங்களில் விடுதலையான இஸ்லாமிய சிறைவாசிகளின் வாக்குமூலங்களும், நேர்காணல்களும், சட்ட வழிமுறைகளும் நமக்கு உணர்த்துகின்றன. இதனை தமிழக அரசும் புரிந்துகொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகள் அனைவரையும் மனிதநேய அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இஸ்லாமிய சகோதரர்கள்
சிறை என்பது தண்டனை கூட மட்டுமல்ல.. அது மனித வாழ்வை பண்படுத்தும் பயிற்சிகூடமும் தான் என்பதை ஆளும் அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் 166வது விதியை பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ளார். இஸ்லாமிய சகோதரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

கருணாஸ்
அரசியலமைப்புச் சட்டம் 161 வது விதியை பயன்படுத்தி வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்க இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications