முக்கிய "அசைன்மென்ட்".. உதயநிதிக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்படுவது ஏன்? ஸ்டாலினின் மாஸ்டர்பிளான்
சென்னை: நாளை அமைச்சராக பதவி ஏற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இதில் உதயநிதிக்கு விளையாட்டு துறை வழங்கப்படுவதற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. உலக அளவில் இப்படி ஒரு செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை என்று மெச்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த தொடர் நடைபெற்றது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற்றது.
இந்த இரண்டிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இவரின் செயல்பாடு பெருமளவில் பாராட்டப்பட்டது. இதில் அமைச்சர் மெய்யநாதனுடன் உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து பணிகளை கவனித்து கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்
அப்போதே இதற்கான ஏற்பாடுகளை உதயநிதி ஸ்டாலின்தான் கவனித்துக் கொண்டார். முக்கியமாக இதன் தொடக்க விழாவிற்கான ஷூட்டிங் இயக்குனர் விக்னேஷ் சிவன் மூலம் நடத்தப்பட்டது. இந்த தொடக்க நிகழ்ச்சி, விளம்பரங்கள் எல்லாம் பெரிய வரவேற்பை பெற்றன. விக்னேஷ் சிவன் இந்த நிகழ்ச்சியை இயக்க உதயநிதி ஸ்டாலினுடன் அவருக்கு இருந்த நட்பு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் வரலாற்றை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசி இருந்தார். அவர் இந்த நிகழ்வில் பங்கெடுக்கவும் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என்று கூறப்பட்டது.

அமைச்சர் பதவி
இந்த நிலையில்தான் செஸ் ஒலிம்பியாட் ஹிட்டை தொடர்ந்து உதயநிதிக்கு விளையாட்டுதுறை பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தயார் செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. மேலும் உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தையும் அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது.

பணிகள்
இதற்கான பணிகள் விரைவில் நடக்க உள்ளது. சென்னை அருகே இடம் கிடைக்காத நிலையில் திருச்சி அருகே இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சர்வதேச போட்டிகளை நடத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது.
மாதிரி படம் சர்வதேச நாடுகளில் இருப்பது போன்ற பிரம்மாண்ட விளையாட்டு அரங்கத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது மிகப்பெரிய முகப்பு அரங்கு இதில் அமைக்கப்பட்டு உள்ளது. நான்கு கால்பந்து அரங்குகளும் இதில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் 4 டென்னிஸ் கோர்ட்கள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. உள் விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அதற்காக தனியாக மிகப்பெரிய அரங்கு இங்கே உருவாக்கப்பட்டு உள்ளது. தடகள போட்டிகளுக்கான அரங்கு தனியாக இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

அரங்கம்
இதில் மிகப்பெரிய அளவில் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. பார்க்கவே வியக்க வைக்கும் வகையில் இந்த மாதிரி படம் உள்ளது. மற்ற விளையாட்டு அரங்குகள் முகப்பு பகுதிக்கு பின்பாக அமைக்கப்பட்டு உள்ளன. தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தும் அரங்குகளும் இங்கேயே அமைக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பின் இது போல பல புதிய திட்டங்களை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது. திமுக என்பது தொடக்க காலத்திலேயே விளையாட்டு போட்டிகள் மூலம் இளைஞர்கள் பலரை கவர்ந்து உள்ளது. முக்கியமாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலில் திமுக இளைஞர்கள் இடையே வளர விளையாட்டு போட்டிகள் முக்கியமான காரணமாக இருந்தது.

உதயநிதி
தற்போது உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை, இளைஞர் நலன் பிரிவு அமைச்சராக இருந்தால், அவரால் இளைஞருடன் நேரடியாக கலந்துரையாட முடியும் என்று திமுக நினைக்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் இடையே உதயநிதி ஸ்டாலின் அடுத்த கட்ட தலைவராக கவனம் பெறுவார் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயநிதியை இளைஞர்கள் இடையே கொண்டு செல்ல இந்த துறை உதவும் என்று திமுக வட்டாரம் தெரிவிக்கின்றது. தமிழ்நாட்டில் பாஜகவும் இதே ரூட்டை எடுத்துள்ளது. சமீபத்தில் மோடி கபடி போட்டிகளை உள்ளூர் அளவில் நடத்தியது. பாஜகவை பிரபலமாக்கும் வகையில் பாஜக இந்த போட்டிகளை நடத்தியது. உதயநிதி விளையாட்டு துறை அமைச்சராகும் பட்சத்தில் அரசு சார்பாக பெரிய அளவில் பல உள்ளூர் விளையாட்டுகள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

வேறு துறை
இது போக முதல்வர் ஸ்டாலினிடம் உள்ள முக்கியமான துறை ஒன்றை உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது வழங்க உள்ளதாக ஆளும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தற்போது முதல்வர் ஸ்டாலினிடம் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை உள்ளது. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு துறையிலும், துறை ரீதியான அறிவிப்பு இல்லாமல், சில சிறப்பு திட்டங்கள் இந்த தனி துறையின் கீழ் கொண்டு வரப்படும். முதல்வர்தான் இந்த சிறப்பு திட்டங்களை அறிவித்து வந்தார். இந்த துறையைத்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் பெற உள்ளார். அனைத்து துறைகளையும் கண்காணிக்க வேண்டும் என்பதால் இந்த துறை இத்தனை காலம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்தது. மற்ற துறைகளை கண்காணிக்க வசதியாக இந்த துறை முதல்வரிடம் இருந்தது. இதுதான் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications