"மணிகள்" கண்ட்ரோலில் எடப்பாடி! உனக்கு தைரியம் இருக்கா? ஓபிஎஸ் சட்டென கோபப்பட்டது ஏன்? இதான் காரணமாம்
சென்னை: சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி சார்பாக நடத்தப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக சென்னையில் போட்டி பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர். சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சமீபத்தில் ஓபிஎஸ் நியமித்தார். இதையடுத்து அவர் வழிகாட்டுதலின் பெயரில், தற்போது அவரின் தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
இதில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர். அவரை நீக்க உனக்கு எப்படி மனம் வந்தது. மகா படுபாவி.. உன்னை அதிமுக மன்னிக்காது. ஓபிஎஸ் ஆகிய நான் சாதாரண தொண்டன். ஆனால் நீ தனியாக கட்சியை கைப்பற்ற துடிக்கிறாய். என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது. எடப்பாடி பழனிசாமியே உனக்கு தைரியம் இருக்கா? அப்படி தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பார் என்று கடுமையாக பேசினார்.
ஓ பன்னீர்செல்வம் இப்படி திடீரென அதிரடியாக பேச தொடங்கி இருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்தின் திடீர் அதிரடிக்கு என்ன காரணம் என்று அவரின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு..

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
கேள்வி: முகம் தெரியாத நபர்களை மாவட்ட செயலாளர்களாக போட்டு ஓ பன்னீர்செல்வம் கூட்டம் நடத்தி உள்ளதாக எடப்பாடி தரப்பு குற்றச்சாட்டு வைக்கிறதே?
பதில்: யார் முகம் தெரியாதவர்கள். வெல்லமண்டி நடராஜன் முகம் தெரியாதவரா? ராஜேந்திரன் முகம் தெரியாதவரா? கோபாலகிருஷ்ணன் முகம் தெரியாதவரா? தர்மர் முகம் தெரியாதவரா? யாருங்க முகம் தெரியாதா ஆள்? அவங்க ஆட்களுக்கு மட்டும்தான் பதவி கொடுக்க வேண்டுமா? தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி கொடுக்க கூடாதா? தொண்டர்களை அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். தொண்டர்களை அவமானப்படுத்திவிட்டு அவர்கள் தொகுதிக்குள் வர முடியுமா? தொகுதிக்குள் கால் எடுத்து வைக்க முடியுமா? அவர்களால் என்ன செய்ய முடியும்.

டிடிவி தினகரன்
கேள்வி: எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்றாக இருந்த போது டிடிவி தினகரன் வாக்குகளை பிரித்தார். இப்போது ஓபிஎஸ் வாக்குகளை பிரிப்பார். இது திமுகவிற்கு சாதகமாக அமையாதா?
பதில்: அதற்குத்தான் ஓபிஎஸ் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். எல்லோரும் இங்கே வாருங்கள் . புத்தி கெட்டு அங்கே இருக்காதீர்கள். இனி இங்கே வாருங்கள். அங்கே இருந்தால் கட்சிக்கு நல்லது இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் அழைக்கிறார்.

கடைசி சான்ஸ்
கேள்வி: ஓபிஎஸ் திடீரென வெடித்து பேச காரணம் என்ன? அவர் மிகவும் நம்பிக்கையாக பேசினாரே? டெல்லியில் இருந்து ஏதாவது உத்தரவு வந்துவிட்டதா?
பதில்: அவர் வேகம் எடுக்கிறார் என்று அர்த்தம். அதிரடி காட்ட போகிறார் என்று அர்த்தம். மக்களை சந்திக்க போகிறார் என்று அர்த்தம். எம்பி தேர்தல் வருகிறது. அந்த தேர்தலுக்காக தயாராகி வருகிறார். அவர் எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பி இருக்கிறார். என் பக்கம் வந்துவிடுங்கள் என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அவர் முடிவு எடுக்க பல முறை யோசிப்பார். 100 முறை கூட யோசிப்பார். ஆனால் முடிவு எடுத்த பின் ஒரு முறை யோசிக்க மாட்டார். வேகமாக நடைபோட்டு செல்வார். ஓபிஎஸ் சொன்னதை கேட்டு அவர் பின்னால் நிர்வாகிகள் வர வேண்டும். ஓபிஎஸ் இப்போது என் பக்கம் வந்துவிடுங்கள் என்று வாய்ப்பு கொடுக்கிறார். அதை கேட்டுக்கொண்டு எடப்பாடி ஓபிஎஸ் பக்கம் வர வேண்டும்.இல்லை என்றால் எடப்பாடிக்குத்தான் சிக்கல்.

எடப்பாடி இல்லாத அதிமுக
கேள்வி: எடப்பாடி இல்லாத அதிமுகதான் ஓபிஎஸ் திட்டமா?
பதில்: ஓபிஎஸ் அழைத்தும் வரவில்லை என்றால் அதுதான் முடிவாக இருக்கும். எடப்பாடி "மணிங்க" கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். ங் மணிங்க சொல்வதைத்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறார். எடப்பாடி டம்மியாக இருக்கிறார். எடப்பாடியை பற்றி எல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்த தகுதி எடப்பாடிக்கு இல்லை.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கேள்வி: எடப்பாடி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளாரே?
பதில்: அவர் நடத்தட்டும். அவர் தனியாக கட்சி தொடங்கி நடத்தட்டும். அதிமுக அலுவலகத்தில் அவர்கள் கூட்டம் நடத்தினால், அவர்கள் கட்டுப்பாட்டில் கட்சி இருக்கிறது என்று ஆகிவிடுமா? கட்சி எங்களிடம்தான் இருக்கிறது. அதிமுக இப்போதும் ஓபிஎஸ் கையில்தான் இருக்கிறது. 2024 வரை ஓ பன்னீர்செல்வத்தை அசைக்க முடியாது. இதுதான் எங்கள் திட்டம்.

பிளான் என்ன?
கேள்வி: 2024 தேர்தலுக்கு சசிகலா + தினகரன் + ஓபிஎஸ் + பாஜக இணைந்து போட்டியிட்டு, எடப்பாடியை கழற்றிவிட வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: ஆம் ஒற்றுமையாக இருப்பதே எங்கள் விருப்பம். இரட்டை இலை எங்களுக்கு வரும். நீங்கள் பாருங்கள். சின்னத்தை முடக்க எடப்பாடி பார்க்கிறார். எங்கள் பக்கம் வந்துவிடுங்கள். என்னிடம் பணம் இருக்கிறது என்று எடப்பாடி அழைக்க பார்க்கிறார். ஆனால் தொண்டர்கள் எடப்பாடி பக்கம் செல்ல மாட்டார்கள். தொண்டர்கள் எல்லோரும் ஓ பன்னீர்செல்வம் பக்கம்தான் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications