காரை யூ டர்ன் போடுங்க.. கடைசி நேரத்தில் மெரினா விசிட் கேன்சல்.. ஜெ. சமாதிக்கு ஏன் போகல? பரபர காரணம்
சென்னை: இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ பன்னீர்செல்வம் செல்வதாக இருந்த பிளான் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. என்ன நடந்தது?
அதிமுக பொதுக்குழு, ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் அடைந்துள்ளது. நாளை அதிமுக பொதுக்குழு நடக்க உள்ளது.
இந்த பொதுக்குழுவிற்காக அதிமுக நிர்வாகிகள் மிக தீவிரமாக தயாராகி வருகிறார்கள். பெரும்பாலும் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளே அதிக அளவில் பொதுக்குழு கூட்டத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு
பொதுக்குழு நாளை நடக்க உள்ள நிலையில் இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முதலில் அனுமதி தரவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அந்த தீர்மானங்களுக்கு அவர் தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளார். அதன்படி இவரிடம் 23 தீர்மானங்கள் அடங்கிய தீர்மான பேப்பர் வழங்கப்பட்டுள்ளது. இந்த 23 தீர்மானங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிங்களை நீக்குவது தொடர்பான தீர்மானம் இடம்பெறவில்லை. இதனால் ஓபிஎஸ் அந்த தீர்மானங்களுக்கு அனுமதி அளித்துள்ளார்.

என்ன நடக்கும்
இதனால் நாளை பொதுக்குழுவில் என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. நாளை பெரும்பாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிங்களை நீக்குவது தொடர்பான தீர்மானம் தனித் தீர்மானமாக வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதற்கு இடையில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா சமாதி முன் கூடி போராட்டம் செய்தனர். இங்கு நேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒப்பாரி போராட்டம் செய்தனர். அதேபோல் இன்று ஜெயலலிதா சமாதி முன் நின்று எடப்பாடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

வருவார்
எடப்பாடி ஒழிக என்றும்.. எடப்பாடி துரோகி என்றும் கூறி கடும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த நிலையில் ஜெயலலிதா சமாதி இருக்கும் இடத்திற்கு ஓபிஎஸ் வருவார் என்று கூறப்பட்டது. அங்கு இதற்காக மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பெரிய அளவில் அலங்காரம் செய்யப்பட்டு ஓபிஎஸ் வருகைக்காக நிர்வாகிகள் காத்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஓபிஎஸ் கிளம்ப வேண்டிய கார்.. யு டர்ன் போட்டு அதிமுக அலுவலகத்திலேயே நிறுத்தப்பட்டது.

என்ன நடந்தது
ஓபிஎஸ் இப்போது இந்த நேரத்தில் ஜெ சமாதி செல்வதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு பக்கம் பொதுக்குழுவை தடை செய்யும் வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இப்போது சமாதி செல்வது சரியாக இருக்காது என்று அவர் சென்டிமென்ட்டாக கருதி இருக்கிறாராம். அதோடு ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்ஸை வரவேற்க கூட்டம் பெரிதாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இப்போது அங்கே போனால் சரியாக இருக்காது என்று முடிவு எடுத்து அவர் பிளானை ரத்து செய்து விட்டாராம்.












Click it and Unblock the Notifications