தமிழ்நாடு வெதர்மேன் மீது திடீரென.. விமர்சன கணைகளை சிலர் ஏவுவது ஏன்? இப்படி ஒரு காரணமா
சென்னை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ்நாட்டில் தனியார் வானிலை அறிவிப்புகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில், தற்போது அவரை ஒரு சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த தாழ்வு மையம் காரணமாக.. தமிழ்நாட்டிற்கு கனமழை பெய்யும் என்று அவர் கணித்து இருந்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையமும் இதே கணிப்பைத்தான் வெளியிட்டு இருந்தது. அதோடு ரெட் அலர்டும் வெளியிட்டது. தமிழ்நாடு வெதர்மேனும் வானிலை தொடர்பாக எச்சரிக்கைகளை தந்து இருந்தார். ஆனால் இந்த தாழ்வு மையம் திசை மாறி ஆந்திரா பக்கம் சென்றது. இன்று அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடந்தது. கரையை கடந்த நிலையில் இதன் வலிமை குறைந்தபடியே இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் இதே திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று எதிர்பார்க்கப்பட்டபடி சென்னைக்கு பெரிதாக மழை பெய்யவில்லை.

நெட்டிசன்கள் விமர்சனம்: இதில் சில நெட்டிசன்கள்.. தமிழ்நாடு வெதர்மேனை விமர்சனம் செய்துள்ளனர். முக்கியமாக குறிப்பிட்ட சில கட்சியினர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானை விமர்சனம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நெல்சன் சேவியர் வெளியிட்டுள்ள போஸ்டில், எதையாவது சொல்லி மக்களை பீதியில் ஆழ்த்திவிடக் கூடாது என்னும் மனப்பான்மையிலேயே, எதையுமே முழுதாக சொல்லாமல், முறைப்படி எச்சரிக்காமல் இத்தனை வருடங்களாக ஏனோதானோ என்று இயங்கி வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
காலநிலை மாற்றம் ஏற்படுத்திய தொடர் பருவநிலை கோளாறுகள், செயற்கைகோள்கள் வழியாக வந்த நுட்பமான வானிலை தகவல்கள், இணைய வளர்ச்சி, சமூக ஊடகங்களின் பெருக்கம் இவற்றால் வானிலை முன் அறிவிப்பை துல்லியமாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் வானிலை ஆய்வுமையம் தகவல்களை முறையான நேரத்தில் தருவதில்லை என குற்றஞ்சாட்டி மாநில நலனுக்காக தனியார் வானிலை ஆய்வாளர்களை அண்மையில் நியமித்திருந்தது கேரள அரசு.
பல்வேறு சீதோஷ்ண நிலைகளைக் கொண்ட இந்தியாவிற்கு வானிலைக்காக மட்டும் தனி தொலைக்காட்சி, பிரத்யேக இலவச Apps என ஐரோப்பிய கண்டங்களுக்கு இணையான வானிலை தகவல் கட்டமைப்பு நமக்கு தேவை. இதற்கு பெரும் நிதி ஒதுக்கீடும் அறிவியல் பார்வையும் தேவை. அதை ஒன்றிய அரசு மட்டுமே செய்யமுடியும்.
ஜான் வெதர்மேன் என்பவர் எலான் மஸ்க் இல்லை. அவரிடம் செயற்கைகோள்கள் இல்லை. அரசின்/தனியார் செயற்கைகோள் தகவல்களை முழுமையாக திரட்டி நடப்பு வானிலை சாத்தியக்கூறுகளை மக்கள் நலன் கருதி நம்முன் எளிமையாக விவரிக்கிறார்.
இந்தவகை தொடர்ச்சியான முறையான அறிவியல் தகவல்களால்தான் ஒடிசா என்னும் மாநிலமே உயிர்சேதங்களை தவிர்த்து இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் வெற்றிகரமாக மாறியது.
பிரதீப் ஜான் போன்றவர்கள் பொதுநல நோக்கில் தங்கள் நேரத்தை செலவிட்டு வானிலை முன் அறிவிப்புகளை பகிர்கிறார்கள். அதுவும் கூட அறிவிப்பது இல்லை. சரியான நேரத்தில் தகவல் பகிர்வதுதான்.
இது ஒரு அரசு செய்யவேண்டிய பணி. அரசு நிரப்பாத இடைவெளியை தனியார் ஆய்வாளர்கள் நிறைவு செய்ய முயல்கிறார்கள். அறிவியல் சமூகமாக இந்த கூட்டுப் பங்களிப்பு வரவேற்க வேண்டிய ஒன்று.
தற்போது திடீரென வெதர்மேன் மீது திட்டமிட்டு எழுப்பப்படும் இந்த தாக்குதலை எப்படி எளிமையாக புரிந்து கொள்வது?
வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கையால் தமிழ்நாடு அரசு நிர்வாகம் புயல் வேகத்தில் வேலை செய்திருப்பது பலரையும் பதட்டத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்திலேயே இருந்தது கூடுதல் பதட்டத்தை கொடுத்திருக்க கூடும்.
என்ன செய்ய வேண்டும்?
சென்னை வானிலை ஆய்வுமையத்திற்கு அண்மையில்தான் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் நவீன கருவிகள் வாங்கப்பட்டன. அவை தரும் தகவல்களை முறையாக Processing செய்து, தக்க நேரத்தில் எச்சரிக்கும்/ஆலோசனை தரும் ஒரு ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. அது தற்போது இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் புயலும் மழையும் இனி ஒரு சீசனைப் போல வரப்போகின்றன. மேற்கத்திய நாடுகள் பனிக்காலத்திற்கு தயாராவது போல, தமிழ்நாடு மழைக்காலத்திற்கு திட்டமிட்டு தயாராக வேண்டும்.
தேசிய/ மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை ஆணையம் என்பது நாட்டின் தவிர்க்க முடியாத அமைப்பாக மாறத் தொடங்கி இருக்கிறது. பிரதீப் ஜான் போன்றவர்களது பணி அதனை இன்னும் வலுவாக்கும், என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications